விசாகப்பட்டினம் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா இதுவரை சிஎஸ்கே வரலாற்றிலேயே எந்த வீரரும் செய்யாத மோசமான பேட்டிங் சாதனை ஒன்றை செய்து இருக்கிறார்.
2024 ஐபிஎல் தொடரில் தனது முதல் இரண்டு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றியை பெற்று இருந்தது. அந்த இரண்டு போட்டிகளிலும் ரச்சின் ரவீந்திரா 200க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து இருந்தார். இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் ரச்சின் ரவீந்திரா மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 191 ரன்கள் குவித்து இருந்தது. 192 ரன்கள் என்ற கடின இலக்கை சேஸிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்திரா அதிரடி துவக்கம் அளிப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவரால் பந்தை சரியாக கணித்து ஆட முடியவில்லை.
அதற்காக சில பந்துகளை எடுத்துக் கொண்டார். ஆனால், மூன்று ஓவர்கள் ஆன நிலையில் 12 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த ரச்சின் ரவீந்திரா கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 16.66 ஆக இருந்தது. இதற்கு முந்தைய போட்டிகளில் 200க்கும் மேல் இருந்த அவரது ஸ்ட்ரைக் ரேட் இந்தப் போட்டியில் 20-ஐ கூட தாண்ட முடியாத நிலைக்கு சென்றது.
இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வரலாற்றிலேயே குறைந்தது 10 பந்துகளை சந்தித்த பேட்ஸ்மேன்களில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்ட பேட்ஸ்மேன் என்ற பரிதாபமான சாதனையை செய்தார் ரச்சின் ரவீந்திரா. மேலும் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் குறைந்தது 10 பந்துகளை சந்தித்த பேட்ஸ்மேன்களில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்டவர்கள் பட்டியலில் 13வது இடத்தை பெற்றார் ரச்சின் ரவீந்திரா.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.