டெல்லி : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற 225 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து குஜராத் அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் குஜராத் அணி தரப்பில் பிரித்வி ஷா - மெக்குர்க் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. குஜராத் அணியின் ஒமர்சாய் முதல் ஓவரை வீசினார். இரு பேட்ஸ்மேன்களும் அதிரடியாக தொடங்கிய நிலையில், டெல்லி அணியின் ஸ்கோர் 3 ஓவர்களில் 34 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்த நிலையில் 4வது ஓவரை வீசிய சந்தீப் வாரியர் பவுலிங்கில் மெக்குர்க் 23 ரன்களிலும், பிரித்வி ஷா 11 ரன்களும் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் அக்சர் படேல் களமிறக்கப்பட, மறுமுனையில் வந்த ஷாய் ஹோப் 5 ரன்களில் வெளியேறினார். இதனால் டெல்லி 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது.
இதன்பின் அக்சர் படேல் - ரிஷப் பண்ட் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் 3 ஓவர்கள் வரை நிதானம் காட்டிய நிலையில், 9 ஓவர் முடிவடைந்த பின் அதிரடிக்கு திரும்பியது. ரஷீத் கான் வீசிய 10வது ஓவரில் 2 பவுண்டரிகள் உட்பட 12 ரன்கள் விளாசப்பட்ட, நூர் அஹ்மத் வீசிய 11வது ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. 12வது ஓவரில் டெல்லி அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடக்க, இருவரும் கியரை மாற்றி அதிரடியில் பொளந்து கட்டினர்.
சிறப்பாக ஆடிய அக்சர் படேல் 37 பந்துகளில் அரைசதம் அடிக்க, நூர் அஹ்மத் வீசிய 17வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் அக்சர் படேல் 43 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட் - ஸ்டப்ஸ் கூட்டணி இணைந்தது. இதன்பின் ரிஷப் பண்ட் சிக்ஸ் அடித்து 34 பந்துகளில் அரைசதம் எட்ட, 18 ஓவர்களில் 171 ரன்கள் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் 19வது ஓவரை சாய் கிஷோருக்கு வழங்கினார் சுப்மன் கில்.
இதனால் உற்சாகமான அதிரடி வீரர் ஸ்டப்ஸ், 4, 6, 4, 6 என்று பொளந்து கட்டினார். இதனை பயிற்சியாளர் நெஹ்ராவும் ரசிக்கவில்லை. தொடர்ந்து கடைசி ஓவரை வீச மோகித் சர்மா அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 2, 6, 4, 6, 6, 6 என்று 31 ரன்களை ரிஷப் பண்ட் விளாசினார். இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 43 பந்துகளில் 8 சிக்ஸ், 5 ஃபோர்ஸ் உட்பட 88 ரன்களையும், ஸ்டப்ஸ் 7 பந்துகளில் 26 ரன்களையும் விளாசினர்.