டெல்லி : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் அக்சர் படேல் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கி அசத்திய நிலையில், சிஎஸ்கே ரசிகர்கள் ஜடேஜாவை பொளந்து கட்டி வருகின்றனர்.
டெல்லி - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 43 பந்துகளில் 8 சிக்ஸ், 5 ஃபோர்ஸ் உட்பட 88 ரன்களை சேர்த்தார். அதேபோல் அக்சர் படேல் 43 பந்துகளில் 4 சிக்ஸ், 5 ஃபோர்ஸ் உட்பட 66 ரன்களை விளாசினார்.

இன்றைய ஆட்டத்தில் அக்சர் படேல் நம்பர் 3 பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார். இவரின் வருகை காரணமாக குஜராத் அணி சுழற்பந்துவீச்சாளரான சாய் கிஷோரை பதுக்கி வைத்தது. அதேபோல் நட்சத்திர ஸ்பின்னர்களான ரஷீத் கான் மற்றும் நூர் அஹ்மத் இருவரையும் அட்டாக்கில் வைத்தனர். இவர்கள் இருவரையும் வெளுத்து கட்டுவதற்காகவே டெல்லி அணி அக்சர் படேலை நம்பர் 3ல் களமிறக்கியது.
அதற்கேற்றபடி ரஷீத் கான் மற்றும் நூர் அஹ்மத் இருவரின் பந்துகளிலும் பவுண்டரி, சிக்ஸ் விளாசி அசத்தினார். 37 பந்துகளில் அரைசதத்தை எட்டினாலும், அடுத்த 6 பந்துகளில் 16 ரன்களை குவித்து ஈடுகட்டினார். இதனால் அக்சர் படேலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கிட்டத்தட்ட இப்படியான ரோலில் விளையாட தான் நேற்று லக்னோ அணிக்கு எதிராக ஜடேஜா நம்பர் 4ல் களமிறக்கப்பட்டார்.
ஆனால் அவர் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு அழுத்தத்தை ஏற்படுத்தியதோடு, 19 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் ஜடேஜா, ஸ்பின்னர்களான ரவி பிஷ்னாய் மற்றும் க்ருனால் பாண்டியாவுக்கு எதிராக 4 ஓவர்களை எதிர்கொண்டார். இதில் 2 பவுண்டரிகளை மட்டுமே ஜடேஜா அடித்தார். இதனால் சிஎஸ்கே அணியின் ரன் குவிப்பு குறைந்தது.
இதனால் அக்சர் படேலின் இன்னிங்ஸை பார்த்து ஆல் ரவுண்டரான ஜடேஜா கற்றுக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் டி20 கிரிக்கெட்டை ஜடேஜா புரிந்து கொண்டு பேட்டிங் ஸ்டைலை மாற்றி கொள்ள வேண்டும் என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.