விசாகப்பட்டினம் : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஃபினிஷர் ரிங்கு சிங் தனது அதிரடி ஆட்டத்தால் ஒரே ஓவரில் ஸ்கோரை எகிற வைத்தார்.
கொல்கத்தா அணியின் மூன்று பேட்ஸ்மேன்கள் 200க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்த நிலையில் ரிங்கு சிங் 300க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து டெல்லி கேபிடல்ஸ் அணியை மேலும் பாதாளத்துக்கு அழைத்து சென்றார்.

இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் பில் சால்ட் 12 பந்துகளில் 18 ரன்களும், சுனில் நரைன் 39 பந்துகளில் 85 ரன்களும் குவித்தனர். அடுத்து ரகுவன்ஷி 27 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். ஆண்ட்ரே ரஸ்ஸல் தன் பங்கிற்கு 19 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் 11 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிங்கு சிங் கடைசி 2 ஓவர்களில் அதிக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் 200க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்த நிலையில், அதை விட அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தார் ரிங்கு சிங்.
19வது ஓவரில் மூன்று சிக்ஸ், ஒரு ஃபோர் மற்றும் 2 ரன்கள் என முதல் ஐந்து பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார். 8 பந்துகளில் 26 ரன்கள் குவித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 325 ஆக இருந்தது. 18வது ஓவரில் 239ஆக இருந்த ஸ்கோர், 19வது ஓவரின் முடிவில் 264 ஆக உயர்ந்தது.
20வது ஓவரில் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசியதை அடுத்து 8 ரன்கள் மட்டுமே எடுத்தது கொல்கத்தா. 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 273 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவே இரண்டாவது மிகப் பெரிய ஸ்கோர் ஆகும்.