விசாகப்பட்டினம் : 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் துவக்க வீரராக களமிறங்கிய சுனில் நரைன் தன் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணியை கதிகலங்க வைத்தார்.
இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் துவக்கம் அளித்தனர். பில் சால்ட் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், முழு நேர பேட்ஸ்மேன் அல்லாத சுனில் நரைன் சிக்ஸர் மழை பொழிந்தார். அடுத்து வந்த இளம் வீரர் ரகுவன்ஷியும் அதிரடி ஆட்டத்தால் மிரள வைத்தார்.

இஷாந்த் சர்மா வீசிய நான்காவது ஓவரில் மட்டும் சுனில் நரைன் 3 சிக்ஸ், 2 ஃபோர் அடித்தார். அந்த ஓவரில் 26 ரன்கள் கிடைத்தது. அந்த ஓவரில் இஷாந்த் சர்மாவும், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டும் ஒவ்வொரு பந்துக்கும் ஃபீல்டர்களை மாற்றினர். ஆனாலும், ஐந்து பந்துகளில் பவுண்டரி சென்றதால் ரிஷப் பண்ட் நொந்து போனார்.
21 பந்துகளில் அரைசதம் அடித்த சுனில் நரைன் 39 பந்துகளில் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து ரகுவன்ஷி 54, ரஸ்ஸல் 41, ரிங்கு சிங் 26 ரன்கள் குவித்தனர். அனைவரும் 200க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 166 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதை அடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றி மூலம், தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி, புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.