டெல்லி : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றிபெற 258 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் டெல்லி அணி தரப்பில் மெக்கர்க் - அபிஷேக் போரெல் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மும்பை அணி தரப்பில் முதல் ஓவரை வீச லூக் வுட் வந்தார். இந்த ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 19 ரன்கள் விளாசப்பட்டது.

தொடர்ந்து உடனடியாக பும்ரா அட்டாக்கில் வந்தார். பும்ரா வீசிய முதல் பந்திலேயே சிக்சர் பறக்கவிட, மொத்த மும்பை அணியும் மிரண்டு போனது. இதே ஓவரில் மேலும் 2 பவுண்டரிகள் அடிக்கப்பட்ட, மொத்தமாக 18 ரன்கள் சேர்க்கப்பட்டது. துஷாரா வீசிய 3வது ஓவரிலும் 4 பவுண்டரிகள் அடிக்கப்பட்ட, டெல்லி அணியின் ஸ்கோர் 55 ரன்களாக உயர்ந்தது.
அதிரடியாக ஆடிய மெக்கர்க் 15 பந்துகளில் அரைசதம் அடிக்க, 5வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 20 ரன்களை மெக்கர்க் விளாசினார். பின்னர் பும்ரா வீசிய 6வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, ஹர்திக் பாண்டியா வீசிய 7வது ஓவரில் 21 ரன்கள் விளாசப்பட்டது. இந்த நிலையில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மெக்கர்க், பியூஷ் சாவ்லா சுழலில் 27 பந்துகளில் 6 சிக்ஸ், 11 ஃபோர்ஸ் உட்பட 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அபிஷேக் போரெல் 27 பந்துகளில் 36 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ரிஷப் பண்ட் - ஹோப் கூட்டணி இணைந்தது. 10 ஓவர்களில் டெல்லி அணியின் ஸ்கோர் 128 ரன்களாக இருந்த நிலையில், ஷாய் ஹோப் அதிரடியை தொடங்கினார். ஸ்பின்னர்களான பியூஷ் சாவ்லா மற்றும் முகமது நபி இருவரையும் ஹோப் சிக்சர்களாக விளாசி பொளந்து கட்டினார். இவருடன் ரிஷப் பண்ட்-ம் இணைந்து அதிரடியில் இறங்க, டெல்லி அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது.
தொடர்ந்து லூக் வுட் பவுலிங்கில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசிய ஹோப், மீண்டும் சிக்சர் அடிக்க முயற்சித்து 17 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடி வீரர் ஸ்டப்ஸ் களம் புகுந்தார். இதன்பின் டெல்லி அணி வீரர்கள் நிதானம் காட்டிய நிலையில், 16.1 ஓவர்களில் 200 ரன்களை கடந்தனர். இதன்பின் 18வது ஓவரை வீச லூக் வுட் வந்தார். இந்த ஓவருக்காக காத்திருந்த ஸ்டப்ஸ் 4, 4, 6, 4, 4, 4 என்று 26 ரன்களை விளாசினார்.
பின்னர் பும்ரா வீசிய 19வது ஓவரில் ரிஷப் பண்ட் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் கடைசி ஓவரை வீச துஷாரா வந்தார். இந்த ஓவரில் 2 சிக்ஸ் உட்பட 17 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்கள் விளாசியது. சிறப்பாக விளையாடிய ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.