டெல்லி : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி உரிமையாளர் சஞ்சு சாம்சனை பார்த்து "வெளியே போ" என்று கத்தியது போல், சிஎஸ்கே போட்டியின் போதும் அநாகரீகமாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் அணி டெல்லி கேபிடல்ஸ். இருந்தாலும் டெல்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் ஒவ்வொரு போட்டியையும் நேரில் கண்டு ஆதரவு அளித்து வருகிறார். இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் சஞ்சு சாம்சனை பார்த்து வெளியே போ என்று கத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

86 ரன்களில் விளையாடி கொண்டிருந்த சஞ்சு சாம்சன், முகேஷ் குமார் பவுலிங்கில் சிக்ஸ் அடிக்க முயன்று ஹோப்பின் அபார கேட்ச்சால் ஆட்டமிழந்தார். பவுண்டரி எல்லையில் ஷாய் ஹோப் கேட்ச் பிடித்தது ரீ-பிளேவில் சரியாக காட்டப்படவில்லை. இதனால் சஞ்சு சாம்சன் நடுவர்களுடன் சில நிமிடங்கள் வாக்குவாதம் செய்தார்.
இதனால் மைதானத்தில் இருந்த டெல்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால், சஞ்சு சாம்சனை பார்த்து கோபமாக வெளியே போ என்று கத்தினார். இந்த வீடியோ ட்ரெண்டாகிய நிலையில், ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதேபோல் ஏற்கனவே சிஎஸ்கே அணிக்கு எதிராகவும் பார்த் ஜிண்டால் ஒருமுறை எல்லை மீறியது ரசிகர்களிடையே விமர்சிக்கப்பட்டு வருகிறது.

2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ஜடேஜா பவுலிங்கில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அக்சர் படேல் டெல்லி அணிக்காக போட்டியை வென்று கொடுப்பார். அந்த போட்டியின் போது பார்த் ஜிண்டால் சிஎஸ்கே அணியையும், அதன் உரிமையாளர்களையும் பார்த்து அநாகரீகமாக கொண்டாடி இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் பார்த் ஜிண்டாலின் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. கடந்த வாரம் பெங்களூர் எஃப்.சி அணிக்கு ஆதரவாக பார்த் ஜிண்டால் கொண்டாடியது முக சுளிப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்கள் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.