5 பந்துகளில் 4 விக்கெட்ஸ்.. டெல்லியை பொளந்த நடராஜன்.. புள்ளிப்பட்டியலில் உச்சம் சென்ற ஐதராபாத்!
டெல்லி : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து டெல்லி அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ட்ராவிஸ் ஹெட் 32 பந்துகளில் 89 ரன்களும், ஷாபாஸ் அஹ்மத் 29 பந்துகளில் 59 ரன்களும், அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 46 ரன்களும் விளாசினர்.

இதன்பின் 267 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது. இதில் அதிரடியாக தொடங்கிய பிரித்வி ஷா 5 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க, அதிரடி வீரர் டேவிட் வார்னர் 2வது ஓவரில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பின் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் - அபிஷேக் போரெல் கூட்டணி இணைந்து அதிரடியாக விளையாடியது.
வாஷிங்டன் சுந்தர் வீசிய 3வது ஓவரில் மெக்குர்க் 30 ரன்கள் விளாச, கம்மின்ஸ் வீசிய 5வது ஓவரில் 20 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக டெல்லி அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 88 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய மெக்குர்க் 15 பந்துகளில் அரைசதம் அடிக்க, 7வது ஓவரின் கடைசி பந்தில் மெக்குர்க் 18 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இருப்பினும் ஷாபாஸ் அஹ்மத் வீசிய 8வது ஓவரில் அபிஷேக் போரெல் 22 ரன்களை விளாசிய நிலையில், மார்க்கண்டே பந்தில் அவர் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் 10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்களை சேர்த்திருந்தது. இதன்பின் வந்த ஸ்டப்ஸ் - ரிஷப் பண்ட் இருவரும் நிதானமாக பேட்டிங் விளையாட, ஐதராபாத் அணி பவுலர்கள் ஸ்லோயர் பந்துகளை வீச தொடங்கினர். இதனால் சோதனையை சந்தித்த ஸ்டப்ஸ் 10 ரன்களில் வெளியேற, ஆட்டம் ஐதராபாத் அணியின் கைகளுக்கு சென்றது.
பின்னர் வந்த டெல்லி வீரர்களில் எந்த வீரராலும் அதிரடியாக விளையாட முடியவில்லை. நடராஜன் வீசிய யார்க்கர் மற்றும் ஸ்லோயர் பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கொடுத்தனர். நடராஜன் வீசிய 19வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், ஒரு ரன்னை கூட விட்டுக் கொடுக்கவில்லை. இதனால் 19.1 ஓவர்களில் டெல்லி அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்த ரிஷப் பண்ட் 35 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக பவுலிங் செய்த நடராஜன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியால் ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


Click it and Unblock the Notifications