25 நாட்களாக எங்கும் நகரவில்லை.. என்னோட அப்பா தான் முக்கியம்.. சிஎஸ்கே வீரர் தீபக் சஹர் நெகிழ்ச்சி!
சென்னை: இந்திய அணியில் விளையாடுவதை விடவும் என் தந்தையே எனக்கு முக்கியம் என்று சிஎஸ்கே வீரர் தீபக் சஹர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் மீது ரசிகர்களின் கவனம் இருந்தாலும், வீரர்கள் அனைவரின் கவனமும் டி20 உலகக்கோப்பை தொடர் மீதே உள்ளது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் காம்பினேஷன் அடிப்படையில் தான் இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்பதால் இந்திய அணிக்காக ஆடிய சில வீரர்கள் தீவிர முனைப்புடன் உள்ளனர்.

இதனிடையே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய தீபக் சஹர், தந்தையின் உடல்நிலை மோசமானதன் காரணமாக தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் இருந்து விலகினார். அதன் பின் ஆஃப்கானிஸ்தான் டி20 தொடருக்கு தேர்வு செய்யப்படாத நிலையில், டி20 உலகக்கோப்பையில் நிச்சயம் இடம்பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.
இதுகுறித்து சிஎஸ்கே வீரர் தீபக் சஹர் பேசுகையில், எனது தந்தை தான் எனக்கு எல்லாவற்றையும் விட முக்கியம். கிரிக்கெட்டில் இவ்வளவு பெரிய இடத்தை நான் பிடிக்க காரணமே என் தந்தை தான். அவர் மருத்துவமனை எமர்ஜென்சி வார்டில் இருக்கும் போது, நான் கிரிக்கெட் விளையாட வெளிநாடு சென்றால், நான் ஒரு நல்ல மகனே கிடையாது. இந்தியாவில் போட்டிகள் நடந்தால் கூட, 4 முதல் 5 மணி நேரங்களில் மீண்டும் வீட்டினை எட்டிவிட முடியும்.
ஆனால் ஏதோ ஒரு தவறு நடந்து, எமர்ஜென்சி சூழலில் நான் வருவதற்கு 2 முதல் 3 நாட்கள் தாமதம் ஏற்பட்டால் என்ன நடக்கும். அதனால் என் தந்தையின் உடல்நிலையை கண்ட பின், தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் இருந்து விலகும் முடிவை எந்த தயக்கமும் இல்லாமல் எடுத்தேன். மருத்துவமனையில் என் தந்தையுடன் 25 நாட்கள் இருந்தேன். அலிகாரில் அவர் மருத்துவமனையில் இருந்த போது, குடும்பத்தினர் அனைவரும் அவருடன் தான் இருந்தோம்.
அதேபோல் கடந்த 2 டி20 உலகக்கோப்பையை காயம் காரணமாக தவறவிட்டேன். ஒருவேளை முழு உடல்தகுதியுடன் இருந்திருந்தால், நிச்சயம் நான் டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பேன். ஏனென்றால் கீழ் வரிசையில் பேட்டிங் செய்யக் கூடிய ஒரு நல்ல பவுலருக்கான தேவை இந்திய அணியில் இருந்தது. அந்த இடத்தில் விளையாட இப்போதும் தகுதியுடன் இருக்கிறேன்.
ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் விளையாடுவதற்கு நான் தயாராகவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம் எந்த பயிற்சியும் இல்லாமல் இருந்தேன். அதன்பின் நேரடியாக என்சிஏவுக்கு சென்று மீண்டும் முழு ஃபிட்னஸை எட்டியுள்ளேன். அங்கு சென்று பயிற்சி பெற்ற பின், ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட தயாராக இருப்பதாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications