சிஎஸ்கே உரிமையாளரால் வீரர்களுக்கு அழுத்தம்? உண்மை இதுதான்.. பிராவோ ஓபன் டாக்
சென்னை : ஐபிஎல் அணிகளிலேயே சிறந்த அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் என்ன நடக்கிறது என பெரும்பாலும் வெளி உலகுக்கு தெரியாது. மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளில் அணியின் உரிமையாளரான அம்பானி குடும்பம் முதற்கொண்டு பலரும் அணி தொடர்பான விஷயங்களை வெளிப்படையாக பேசுவார்கள்.
இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி அந்த அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பவுலிங் பயிற்சியாளருமான பிராவோ மனம் திறந்து பேசி இருக்கிறார்.

சில ஐபிஎல் அணிகளில் உரிமையாளர்களால் சரியாக செயல்படாத வீரர்களுக்கு அழுத்தம் ஏற்படுவதாக ஒரு பேச்சு உள்ள நிலையில் சிஎஸ்கே அணியில் அது போல எதுவுமே இல்லை எனக் கூறி இருக்கிறார் பிராவோ. இது பற்றி பிராவோ பேசுகையில், "சிஎஸ்கே அணியில் வெளியில் இருந்து வரும் அழுத்தமோ, உரிமையாளர்களிடம் இருந்து வரும் அழுத்தமோ கிடையாது. அவர்கள் வீரர்களை அவர்களாகவே இருக்க விட்டு விடுவார்கள். இந்த அணியின் அழகே அதுதான்" என்றார்.
பிராவோ இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிய வீரர் என்பதால் அவர் மறைமுகமாக மும்பை இந்தியன்ஸ் அணியை தான் குறிப்பிடுகிறாரோ என்ற கேள்வி எழுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நீக்கப்பட்டு இருக்கிறார். அதிலேயே அந்த அணிக்குள் புகைச்சல் எழுந்து இருக்கிறது. ரோஹித் சர்மா தன்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது குறித்தோ, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது குறித்தோ இதுவரை எதுவும் பேசவில்லை.
ஆனால், சிஎஸ்கே அணியில் கேப்டனை மாற்றுவது குறித்த முடிவைக் கூட பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் மற்றும் அணியின் தற்போதைய கேப்டன் தோனியும் தான் எடுக்க வேண்டும் என சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் சமீபத்தில் கூறி இருந்தார். இதில் இருந்தே சிஎஸ்கே அணி உரிமையாளர்களோ, அதிகாரிகளோ வீரர்கள் விஷயத்தில் தலையிடுவது இல்லை என பிராவோ சொல்வதை புரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications