தோனி ஓய்வு? சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் ஃபைனல்.. பிசிசிஐ அதிரடி முடிவு.. சிஎஸ்கே பக்கா பிளான்
சென்னை : 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் ஒரு தகுதிச் சுற்றுப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன. 2024 ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற இருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கும் சென்னையில் அவரது கடைசி கிரிக்கெட் போட்டி அமையும் வகையில் இந்த அட்டவணை உருவாக்கப்பட்டு இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் தனது கடைசிப் போட்டியில் ஆடினார். அதன் பின் 2020இல் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வை அறிவித்தார். அப்போதிருந்து இதுவரை நான்கு ஐபிஎல் தொடர்களில் ஆடி இருக்கிறார் தோனி. தற்போது 2024 ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்க இருக்கிறார்.

தனது 42வது வயதில் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கிறார். இந்த தொடருக்கு பின் வர ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவார் என பலரும் கூறி வருகின்றனர். அதற்கேற்ப சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட் வசம் ஒப்படைத்து இருக்கிறார் தோனி.
இந்த நிலையில் தான் ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்க இருக்கும் மைதானம் எது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டி மற்றும் முதல் தகுதிச் சுற்றுப் போட்டிகள் அகமதாபாத் மைதானத்திலும், இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டி மற்றும் ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
சிஎஸ்கே அணி நிச்சயம் பிளே-ஆஃப் செல்லும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கும் நிலையில், சேப்பாக்கத்தில் தகுதிச் சுற்றுப் போட்டி அல்லது இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணியில் தோனி தனது கடைசி ஐபிஎல் போட்டியில் ஆட முடியும். இந்த அட்டவணை திட்டத்தின் பின்னணியில் சிஎஸ்கே அணியும் இருக்கலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications