சென்னை: ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடரின் சாம்பியன் பட்டத்தை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதே சென்னை மைதானத்தில் தான் கேகேஆர் அணி முதல் முறையாக 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சிஎஸ்கேவை வீழ்த்தி கைப்பற்றியது.
தற்போது அதே மைதானத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கே கே ஆர் அணி சாதனை படைத்திருக்கிறது. மேலும் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் கோப்பையை கேகஆர் கைப்பற்றி உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், 2016 ஆம் ஆண்டு சாம்பியன் ஆன சன்ரைசர்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்தியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இறுதி ஆட்டத்தில் பெரிய இலக்கை நிர்ணயித்தால் வெற்றி கிடைக்கும் என்ற யுத்தியில் அவர் இந்த முடிவை எடுத்தார். ஆனால் தாம் எடுத்தது மிகவும் தவறான முடிவு என்று பிறகுதான் அவருக்கு தெரிந்தது. சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் இந்த சீசன் முழுவதும் அபாரமாக விளையாடிய நிலையில், இறுதி போட்டியில் கடுமையாக சொதப்பினர்.
குறிப்பாக அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா 2 ரன்களிலும் டிராவிஸ் ஹெட் கோல்டன் டக் ஆகியும் வெளியேறினர். ராகுல் திருப்பாதி தன் பங்கிற்கு 9 ரன்கள் சேர்க்க தென்னாப்பிரிக்கா வீரர் மார்க்கரன் 20 ரன்களில் வெளியேறினார். இதேபோன்று நிதீஷ்குமார் ரெட்டி 13 ரன்களிலும் தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரர் கிளாசன் 16 ரன்களிலும், சேபாஸ் அஹமத் 8 ரன்களிலும், அப்துல் சமத் 4 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் சன்ரைசர்ஸ் அணி 90 ரன்கள் சேர்ப்பதற்குள் எட்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் பாட் கம்மின்ஸ் மட்டும் தனியாளாக போராடி 24 ரன்கள் சேர்த்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவரில் 113 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதனை அடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது.
இதில் தொடக்க வீரர் சுனில் நரைன் தாம் எதிர்கொண்ட முதல் பந்திலே சிக்ஸர் அடித்த நிலையில், இரண்டாவது பந்தில் ஆட்டம் இழந்தார். இதனால் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என சன்ரைசர்ஸ் வீரர்கள் நினைத்தனர். ஆனால் அதற்கு தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் முட்டுக்கட்டையாக இருந்தார்.
பவர் பிளேவில் களம் இறங்கிய அவர் மூன்று சிக்சர், நான்கு பவுண்டரி என பட்டையை கிளப்பினார். இதன் மூலம் 24 பந்துகளில் வெங்கடேஷ் ஐயர் அரைசதத்தை பூர்த்த செய்தார். குர்பாஷ் 39 ரன்கள் சேர்க்க, கொல்கத்தா அணி 10.3வது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. . இதன் மூலம் கொல்கத்தா நைட்ரஸ் சாமி மூன்றாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.