மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலம் பல சாம்பியன் வீரர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். பல ஸ்டார் வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்கள். அஸ்வின், ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைத்திருக்கிறது.
ரஞ்சி கோப்பையில் விளையாடி இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதை விட ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் இந்திய அணியில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை தற்போது வீரர்களிடையே நிறைய இருக்கிறது.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் ஷசாங் சிங் மற்றும் ஆஸ்ட்டோஷ் சர்மா போன்ற வீரர்கள் பிரமாதமாக விளையாடி வருகிறார்கள். இதனால் நடப்பு டி20 உலக கோப்பையில் இந்த இரு வீரர்களுக்கும் இடம் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேலும் ஜெயஸ்வால், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், சிவம் துபே போன்ற வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோன்று தற்போது ஐபிஎல் தொடரில் தடுமாறி வரும் கில், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இதில் அனைத்திற்கும் வேட்டு வைப்பது போல் தற்போது பிசிசிஐ ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ஐபிஎல் தொடரில் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் யார் சொதப்புகிறார்கள் என்பதையெல்லாம் பார்த்து டி20 உலக கோப்பைக்கு அணி தேர்வு செய்யப்படாது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டி20 உலக கோப்பைக்கு ஐபிஎல் தொடரை வைத்து தேர்வு செய்யப்படவில்லை என்றால் பிறகு எதற்கு ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கில் போன்ற வீரர்கள் தற்போது தடுமாறி வருவதை சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள் அவர்களுக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் இதையெல்லாம் பிசிசிஐ கேட்பது போல் தெரியவில்லை. இதனால் 2023 ஆம் ஆண்டு உலக கோப்பையில் எப்படிப்பட்ட ஒரு அணி தேர்வு செய்யப்பட்டதோ, அதே போல் தான் டி20 உலக கோப்பைக்கும் அணி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் போது எப்படி இளம் வீரர்களுக்கு அணியில் இடம் வழங்கப்பட்டதோ அதை போல் ஒரு பார்முலாவை செயல்படுத்தினால் மட்டுமே இந்திய அணி மீண்டும் டி20 உலக கோப்பையை வெல்ல முடியும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.