சென்னை : ஐபிஎல் தொடரில் ஒரு காலத்தில் பிளே ஆப் சுற்று என்று இல்லாமல் அரை இறுதி மட்டும் இருக்கும் வகையில் அட்டவணைகள் அமைக்கப்பட்டிருந்தது. அதாவது முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணியில் முதலிடமும் நான்காவது இடம் பிடிக்கும் அணி ஒரு அரையிறுதியிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணி மற்றொரு அரையிறுதியிலும் மோதும்.
இந்த சூழலில் தொடர் முழுவதும் கஷ்டப்பட்டு வென்று முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணிக்கு கூடுதல் சாதகம் வரவேண்டும் என்பதற்காக பிளே ஆப் முறை கொண்டுவரப்பட்டது. அதில் குவாலிபையர் ஒன்று, குவாலிபையர் 2, எலிமினேட்டர் என மூன்று வகையில் போட்டிகள் பிரிக்கப்பட்டன. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிக்கு கூடுதலாக ஒரு போட்டியில் விளையாடும் வகையில் சாதகமாக அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் முன்பெல்லாம் எட்டு அணிகள் இருந்தது. அதனால் முதல் நான்கு இடங்களை பிடிக்க பெரிய பிரச்சனை ஒன்றும் ஏற்படவில்லை. ஆனால் இப்போது பத்து அணிகள் இடம் பிடித்து இருப்பதால் அதில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிக்குதான் வாய்ப்பு என்பது மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ரன் ரேட் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது.
இந்த சூழலில் பிசிசிஐ ஐபிஎல் தொடரின் வடிவத்தை மாற்றினால் ஐந்து இடங்கள் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வகையில் கொண்டு வரலாம். அதன்படி எலிமினேட்டர் என்று ஒரு போட்டியை நடத்த வேண்டும். அதில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தை பிடிக்கும் அணிகள் மோத வேண்டும். இதேபோன்று நாக் அவுட் என்ற ஒரு போட்டியை நடத்த வேண்டும்.
இதில் மூன்றாவது மற்றும் எலிமினேட்டர் போட்டியில் வென்ற அணி மோத வேண்டும். குவாலிபையர் என்று போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி மோத வேண்டும். இதில் தோற்கும் அணி சேலஞ்சர் போட்டியில் விளையாட வேண்டும். இந்த சேலஞ்சர் போட்டியில் நாக் அவுட் போட்டியில் வெற்றி பெற்ற அணியும் குவாலிபையர் 1 தோற்ற அணியும் மோத வேண்டும். இதில் யார் வெல்கிறார்களோ அவர்கள் இறுதிப் போட்டிக்கு சென்று குவாலிபயரில் வெற்றி பெற்ற அணியுடன் மோதுவார்கள்.
அதாவது தற்போது குவாலிஃபயர் ஒன்று, குவாலிபயர் 2 எலிமினேட்டர் என மூன்று போட்டிகள் நடத்தப்படுவதற்கு பதிலாக எலிமினேட்டர், குவாலிஃபயர், நாக்அவுட், சேலஞ்சர் என நான்கு வகையில் போட்டிகள் நடத்தினால் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த முறை பிக் பாஸ் லீக் தொடரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைமுறை படுத்தப்பட்டு வெற்றி காணப்பட்டது.
தற்போது இதை ஐபிஎல் தொடரில் கொண்டு வந்தால் சிஎஸ்கே போன்ற அணி ரன் ரேட்டில் மிஸ் ஆகி இருந்தாலும் ஐந்தாவது இடத்தில் பிடித்திருப்பது மூலம் பிளே ஆப் சுற்றில் விளையாடி இருக்க முடியும் எனவே இந்த முறைக்கு பிசிசிஐ மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.