IPL 2024 - என்னுடைய விலை இதுதான்.. ஐபிஎல் அணிகளை மிரள வைத்த முன்னாள் சிஎஸ்கே வீரர் கேதார் ஜாதவ்
மும்பை : 2024 ஐபிஎல் மினி ஏலம் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், தனது அடிப்படை விலையாக நம்ப முடியாத தொகையை நிர்ணயம் செய்துள்ளார் 38 வயதான முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் கேதார் ஜாதவ்.
கேதார் ஜாதவ் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். அவர் முன்பு உள்ளூர் தொடர்களில் சிறப்பாக ஆடி ரன் குவித்து இருந்ததால், 2010 முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். அப்போது முதல் 2020 வரை அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வந்தார். ஆனால், 2021 ஐபிஎல் தொடருக்கு பின் அவரது நிலைமை மோசமானது.
2015 - 2017 காலகட்டத்திலேயே கேதார் ஜாதவ் மீது விமர்சனம் இருந்தது. அவர் சரியாக ரன் குவிக்கவில்லை. ஆனால், அதையும் மீறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை 2018 ஐபிஎல் ஏலத்தில் 7.80 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது. ஆனால், அவரால் பல போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.

மோசமாக ஆடியதால் 2021 ஐபிஎல் தொடருக்கு முன் அவர் சிஎஸ்கே அணியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்து நடந்த ஏலத்தில் எந்த அணியும் ஏலத்தில் அவரை வாங்க விருப்பம் காட்டவில்லை. அதனால், 2022 ஐபிஎல் தொடரில் கேதார் ஜாதவ் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. 2023 ஐபிஎல் மினி ஏலத்திலும் அவரை எந்த அணியும் வாங்கவில்லை.
பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் டேவிட் வில்லி காயத்தால் வெளியேறியதால் அவருக்கு பதில் மாற்று வீரராக கேதார் ஜாதவ் அந்த அணியில் அணியில் சேர்க்கப்பட்டார். இரண்டு போட்டிகளில் பங்கேற்ற அவர் ஒரு போட்டியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்று 10 பந்துகளில் 12 ரன்கள் மட்டும் எடுத்தார்.
இந்த நிலையில், தற்போது 2024 ஐபிஎல் மினி ஏலத்தில் தன் பெயரை அளித்துள்ளார். ஒவ்வொரு வீரரும் தனக்கான அடிப்படை விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற நிலையில், கேதார் ஜாதவ் தனக்கு தானே 2 கோடி என அடிப்படை விலையை நிர்ணயம் செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்களான பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், ட்ராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தங்களுக்கு இரண்டு கோடி அடிப்படை விலை நிர்ணயம் செய்துள்ளனர். ஆனால், வாய்ப்பில்லாமல் இருக்கும் கேதார் ஜாதவ் தன் விலையை சில லட்சமாக குறைத்துக் கொள்ளாமல் நட்சத்திர வீரர்களுடன் போட்டி போட்டு 2 கோடி என நிர்ணயம் செய்து அவரது அனுபவத்துக்காக வாங்கலாம் என நினைக்கும் ஐபிஎல் அணிகளையும் மிரள வைத்துள்ளார்.
இந்த நிலையில், அவரை இந்த முறையும் எந்த அணியும் ஐபிஎல் ஏலத்தில் வாங்காது என்றே கூறப்படுகிறது. ஆனாலும், ஏதோ ஒரு நம்பிக்கையில் அவர் 2 கோடி என அடிப்படை விலை நிர்ணயம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications