அகமதாபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் முக்கிய கட்டத்தில் குஜராத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி படுதோல்வியை தழுவியது. அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிஎஸ்கே எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை எடுத்து களமிறங்கிய குஜராத் அணியின் சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்கனை சேர்த்தனர். குஜராத் அணிக்கு இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்ததால் இருவரும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து சிஎஸ்கே பந்து வீச்சை சுக்கு நூறாக உடைத்தனர்.

அபாரமாக விளையாடிய சாய் சுதர்சன் 51 பந்துகள் எல்லாம் 103 ரன்களை விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும்,ஏழு சிக்ஸர்களும் அடங்கும். கேப்டன் கில்லும் தன்னுடைய பழைய அதிரடியை வெளிப்படுத்தினார். 55 பந்துகள் எல்லாம் 104 ரன்கள் குவித்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும்.
இதன் மூலம் குஜராத் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களம் இறங்கியது. இம்பாக்ட் வீரராக களம் இறங்கி சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த ரகானே 5 பந்துகளை எதிர் கொண்டு வெறும் 1 ரன் மட்டும்தான் எடுத்தார். அதே போன்று ரச்சின் ரவீந்திரா 1 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
யாருமே எதிர்பார்க்காத வகையில் கேப்டன் ருதுராஜ் டக் அவுட்டாக சிஎஸ்கே அணி 10 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டாரல் மிட்செல், மோயின் அலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் அதிரடியை காட்டி சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தனர். டேரல் மிட்செல் 34 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து முக்கிய கட்டத்தில் பெவிலியன் திரும்பினார். இதில் ஏழு பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். மறுமுனையில் மோயின் அலி 36 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார்.
இதில் நான்கு பவுண்டரி, நான்கு சிக்சர்கள் அடங்கும் இந்த நிலையில் சிவம் துபே, ஜடேஜா ஜோடி சிஎஸ்கேவை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவம் துபே 13 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் மோகித் சர்மா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா பத்து பந்துகளில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் ரஷித் கான் ஆட்டம் இழந்தார்.இதனால் சிஎஸ்கே அணியின் தோல்வி உறுதியானது. கடைசி ஓவரில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 52 ரன்கள் தேவைப்பட்டபோது தோனி 2 சிக்சர்கள், 1 பவுண்டரி அடித்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தார். இதனால் சிஎஸ்கே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.