அகமதாபாத் : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால், குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 63வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து குஜராத் அணி களமிறங்கவிருந்தன. இந்த போட்டியில் குஜராத் அணி வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க முடியும் என்ற நிலை இருந்தது. இதுவரை குஜராத் அணி விளையாடிய 12 போட்டிகளில் 7 தோல்வி, 5 வெற்றி உட்பட 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக அகமதாபாத் மைதானத்தில் கனமழை பகுதியில் கனமழை பெய்ய தொடங்கியது. இருப்பினும் மைதானத்தை மொத்த தார்பாய் வைத்து மறைத்து தண்ணீர் உள்ளே செல்லாமல் மைதான பராமரிப்பாளர்கள் பாதுகாத்தனர். அவ்வப்போது மழை நின்றாலும், மீண்டும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
இதனால் நடுவர்கள் மைதானத்தை சென்று பார்வையிட, மீண்டும் பெவிலியன் செல்ல என்று இருந்தனர். ஆனால் 10.35 மணி வரை காத்திருந்த நடுவர்கள், பின்னர் இரு அணிகளின் கேப்டன்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்பட்டன. இதன் காரணமாக பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் இருந்து குஜராத் அணி வெளியேறியுள்ளது. முதல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் அணி, 2வது சீசனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த சீசனில் நட்சத்திர வீரர் சுப்மன் கில் தலைமையில் குஜராத் அணி களமிறங்கியது.
இதனால் கேப்டனாக களமிறங்கிய முதல் சீசனிலேயே சுப்மன் கில் அணியை கரை சேர்க்க தவறியுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் முதல்முறையாக மழை காரணமாக ஆட்டம் கைவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.