அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 2024 ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பும்ராவுக்கு முதல் ஓவர் தராதது ரசிகர்கள் மட்டுமின்றி, முன்னாள் வீரர்களையும் அதிர வைத்தது.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தனது முதல் போட்டியில் களமிறங்கினார். அவரது சொந்த மண்ணான குஜராத்தில் ரசிகர்கள் அவருக்கு எதிராக குரல் கொடுத்தனர். இந்த நிலையில் போட்டியில் மும்பை அணி முதலில் பந்து வீசியது.

மும்பை அணியில் வேகப் பந்துவீச்சாளர்களாக பும்ரா, லூக் உட், ஜெரால்ட் கோட்ஸி மற்றும் ஹர்திக் பாண்டியா இருந்தனர். இவர்கள் மூவரில் முதல் ஓவரை வீச தகுதியான வேகப் பந்துவீச்சாளர் பும்ரா மட்டுமே. ஆனால், ஹர்திக் பாண்டியா போட்டியின் முதல் ஓவரை வீசினார். இரண்டாவது ஓவரிலாவது பும்ரா பந்து வீச வருவார் என எதிர்பார்த்த நிலையில் லூக் உட் பந்து வீசினார். பும்ரா நான்காவது ஓவரில் தான் பந்து வீச வந்தார். முதல் மூன்று ஓவர்களில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்து இருந்தது.
பின்னர் பும்ரா நான்காவது ஓவரில் விரிதிமான் சாஹா விக்கெட்டை வீழ்த்தினார். பும்ரா முதல் ஓவரை வீசாதது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த சில ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா முதல் நான்கு ஓவர்கள் பந்து வீசாமல் இருந்து இருக்கிறார். ஆனால், அப்போது மும்பை அணியில் ட்ரென்ட் போல்ட் இருந்தார். அவரால் மிடில் ஓவர்களில் பந்து வீச முடியாது என்பதால் அவரை முதல் ஓவர்களில் பந்து வீச பயன்படுத்தி விட்டு, பும்ராவை மிடில் ஓவர்கள் மற்றும் கடைசி ஓவர்களில் அப்போதைய கேப்டன் ரோஹித் சர்மா பயன்படுத்துவார்.
ஆனால், ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியைப் போலாம் மும்பை அணியிலும் தானே முதல் ஓவரை வீசி இருக்கிறார். இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா 3 ஓவர்கள் வீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்தார். 1 விக்கெட் கூட வீழ்த்தவில்லை. மாறாக பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
பும்ரா முதல் இரண்டு ஓவர்களில் பந்து வீசி இருந்தால் அப்போதே குஜராத் அணி விக்கெட்களை இழந்து நிதான ஆட்டத்துக்கு மாறி இருக்கக் கூடும். துவக்கத்தில் அதிக ரன் குவித்த குஜராத் அணி, பும்ரா கடைசி ஓவர்களில் விக்கெட் வீழ்த்திய நிலையில் அப்போது ரன் குவிக்க முடியாமல் திணறி 168 ரன்கள் எடுத்தது.