அகமதாபாத் : பஞ்சாப் அணியின் வெற்றிக்கு ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா இருவரும் தான் காரணம் என்று அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 48 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்தார்.

இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் அதிரடியாக அரைசதம் அடித்து அசத்தியதோடு, கடைசி வரை நின்று பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார். சிறப்பாக விளையாடிய ஷஷாங்க் சிங் 29 பந்துகளில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 61 ரன்களை சேர்த்தார்.
அதேபோல் இம்பேக்ட் பிளேயராக வந்த அஷுதோஷ் சர்மா 17 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டத்தை கடைசி நேரத்தில் மாற்றினார். இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றி குறித்து பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் பேசுகையில், நிச்சயம் இதுவொரு அற்புதமான போட்டி என்று தான் சொல்ல வேண்டும். கடைசி வரை த்ரில்லாக அமைந்தது. நிச்சயம் பஞ்சாப் வீரர்கள் வெற்றியை பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
200 ரன்கள் இலக்கு என்றவுடன் நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது. ஆனால் நான் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினேன். ஆனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் கிட்டத்தட்ட 60 ரன்கள் சேர்க்கப்பட்டது. நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சி செய்து கொண்டே இருந்தோம். ஆனால் ஷஷாங்க் சிங் வந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் களமிறங்கிய சில பந்துகளிலேயே சிக்சர்களை விளாசியதை பாராட்டியே ஆக வேண்டும்.
நம்பர் 7 வீரராக இந்த சீசனை தொடங்கினார். இப்போது பாசிட்டிவ் மனநிலையில் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் ஐபிஎல் தொடரை நீண்ட காலமாக விளையாடி வருகிறார். அதேபோல் இளம் வீரரான அஷுதோஷ் சர்மாவும் இம்பேக்ட் வீரராக வந்து பிரஷரான சூழலில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.