அகமதாபாத் : ஐபிஎல் ஏலத்தின் போது பஞ்சாப் அணியால் தவறாக வாங்கப்பட்ட ஷஷாங்க் சிங், அந்த அணிக்காக ஒற்றை ஆளாக நின்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியை வென்று கொடுத்துள்ளார்.
டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் போது பஞ்சாப் கிங்ஸ் அணியால் புதிய சர்ச்சை கிளம்பியது. பஞ்சாப் அணி தரப்பில் ஷஷாங்க் சிங் என்ற வீரர் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். ஆனால் பஞ்சாப் அணி வாங்க நினைத்திருந்த ஷஷாங்க் சிங்கிற்கும், தற்போது வாங்கிய ஷஷாங்க் சிங்கும் வெவ்வேறு வீரர்கள் என்பது புரிய வந்தது.

இதனால் இந்த ஷஷாங்க் சிங்கை நாங்கள் வாங்க விரும்பவில்லை என்று ஏலதாரரான மல்லிகா சாகரிடம் பஞ்சாப் அணி முறையிட்டது. ஆனால் ஏலத்தில் ஒரு முறை பேடிலை உயர்த்தி வாங்கிவிட்டால், அந்த வீரரை ஐபிஎல் நிர்வாக குழு திரும்ப பெறாது. இதனால் 18 வயது ஷஷாங்க் சிங்கிற்கு பதிலாக 32 வயதாகும் ஷஷாங்க் சிங்கை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு பஞ்சாப் அணி தள்ளப்பட்டது.
இதுதொடர்பாக ஒரே பெயரில் இரு வீரர்கள் இருந்ததால், குழம்பியது உண்மை தான். ஆனாலும் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு பங்களிக்க ஷஷாங்க் சிங்கை அணிக்கு வரவேற்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டது. இருப்பினும் ஷஷாங்க் சிங்கிற்கு முதல் போட்டியில் இருந்தே பஞ்சாப் அணி பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கிட்டத்தட்ட பஞ்சாப் அணியை தோல்வியில் இருந்து மீட்டு கொண்டு வந்து வெற்றிபெற வைத்துள்ளார். சிறப்பாக விளையாடிய ஷஷாங்க் சிங் 29 பந்துகளில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 61 ரன்களை விளாசி பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இதன் மூலமாக பஞ்சாப் அணிக்கும் ஷஷாங்க் சிங் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
தன்னை வாங்கியது தவறில்லை, தன்னை வாங்காமல் இருந்திருந்தால் தான் தவறு நடந்திருக்கும் என்பதை பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவிற்கும் புரிய வைத்துள்ளார். ஷஷாங்க் சிங்கின் ஆட்டத்தால் குஜராத் அணியை அதன் சொந்த மண்ணில் முதல்முறையாக பஞ்சாப் அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.