அகமதாபாத் : ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரிலேயே குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7 தோல்வி, 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி அபார வெற்றியை பெற்றது. அதற்கு முன்பாக கிளென் மேக்ஸ்வெல் ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்தார்.

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று மேக்ஸ்வெல் மூன்றிலும் சொதப்பி வந்தார். ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணிக்கு பங்களிக்க முடியாத நிலையில், தானாக முன் வந்து ஓய்வு எடுத்து கொள்வதாக அணி நிர்வாகத்திடம் கூறினார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் கம்பேக் கொடுத்துள்ளார். இதனால் அவர் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் குஜராத் அணி தரப்பில் சாஹா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே சாஹா 5 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் - சாய் சுதர்சன் கூட்டணி இணைந்து ரன்கள் குவிக்க தொடங்கியது.
6 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 42 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 7வது ஓவரை வீச மேக்ஸ்வெல் அழைக்கப்பட்டார். ஆஃப் ஸ்பின்னர் என்பதால் இவரை அட்டாக் செய்யும் முடிவிற்கு சுப்மன் கில் வந்திருந்தது அவரின் ஆட்டத்திலேயே தெரிந்தது. இதனை அறிந்து கொண்ட மேக்ஸ்வெல், லாங் ஆன் மற்றும் லாங் ஆஃப் திசையில் ஃபீல்டர்கள் நிறுத்தி, கொஞ்சம் ஒய்டாக வீசினார்.
இதனையறிந்தும் சுப்மன் கில் சிக்சர் அடிக்க முயற்சிக்க, கேமரூன் க்ரீன் பாய்ந்து வந்த அபார கேட்சை பிடித்தார். இதனால் சுப்மன் கில் 19 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்து வெளியேறினார். சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்திய போது, மேக்ஸ்வெல் கத்தி கொண்டாட, அகமதாபாத் மைதானத்தில் இருந்த ரசிகர்களும் உடன் சேர்ந்து கோஷம் எழுப்பினர். அந்த சத்தத்தின் டெசிபிள் 123ஆக இருந்ததால் அகமதாபாத் மைதானமே அதிர்ந்தது.