அகமதாபாத் : மயங்க் அகர்வால் மற்றும் ஐடன் மார்கிரம் ஆமை வேகத்தில் பேட்டிங் செய்து பவர்-பிளே ஓவர்களில் ஒரு பந்துக்கு ஒரு ரன் எடுக்காமல் ஆடியதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குறைவான ஸ்கோர் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி தோல்வி அடைய இதுவே முக்கிய காரணமாக அமைந்தது.
அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் 14 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். மயங்க் அகர்வால் 17 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து வந்த அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம் ஆடியதால் ரன் ரேட் அதிகரித்தது.

ஆனால், நான்காம் வரிசையில் இறங்கிய ஐடன் மார்கிரம் நிதான ஆட்டம் ஆடி ரன் ரேட்டை குறைத்தார். அவர் 19 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் கிளாசன் 13 பந்துகளில் 24 ரன்களும், ஷபாஸ் அஹ்மத் 20 பந்துகளில் 22 ரன்கள், அப்துல் சமத் 14 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தனர். சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாஹா அதிரடி துவக்கம் அளித்தார். அவர் 13 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். அதன் பின் ரன் ரேட் 8க்கு கீழ் செல்லாமல் பார்த்துக் கொண்ட சுப்மன் கில் 36, சாய் சுதர்ஷன் 45 ரன்கள் சேர்த்தனர். கடைசி 5 ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடிய டேவிட் மில்லர் 27 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து தன் அணியை வெற்றி பெற வைத்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் சன்ரைசர்ஸ் அணி தான் ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளை சந்தித்து இருக்கிறது.