மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனக்கு காயம் ஏற்பட்டதை மறைத்து ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருவதாக புகைச்சல் கிளம்பி உள்ளது. அதன் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இந்திய டி20 அணியில் அவரை ஓரங்கட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2024 ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களும் பந்து வீசி தன்னை ஒரு வேகப் பந்துவீச்சாளராக நிரூபிக்க முயன்றார். அதிலும் முதல் ஓவரை வீசி ஒரு முழு நேர வேகப் பந்துவீச்சாளர் போல செயல்பட்டு இருந்தார்.

ஆனால், கடைசி மூன்று போட்டிகளில் அவர் ஒரு ஓவர் மட்டுமே பந்து வீசி இருக்கிறார். இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் அவர் காலில் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கடந்த 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் போது ஹர்திக் பாண்டியா கால்களில் காயம் ஏற்பட்டது.
அதில் இருந்து மீண்டு வர ஐந்து மாதங்கள் எடுத்துக் கொண்டார் ஹர்திக் பாண்டியா. சரியாக 2024 ஐபிஎல் தொடருக்கு முன் தயாரான அவர் ஆல் - ரவுண்டராக பங்கேற்றார். ஆனால், இரண்டு போட்டிகளுக்கு பின் பந்து வீசுவதை நிறுத்திக் கொண்டதால், அவருக்கு மீண்டும் காலில் வலி அல்லது காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப் பெறச் செய்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பின் பாண்டியாவிடம் அவர் பந்து வீசாதது குறித்து கேட்ட போது அவர் அணியில் போதிய பந்துவீச்சாளர்கள் இருப்பதால் தான் பந்து வீசவில்லை என தனக்கு காயம் இருப்பதை மறைத்து இருப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டல் விமர்சனம் செய்து இருக்கிறார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் இருக்கும் பட்சத்தில் அவரை 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா சேர்க்காமல் போக வாய்ப்பு உள்ளது. சிவம் துபே வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டராக செயல்படுவார் என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடும்.