மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆரி போட்டிகளில் பங்கேற்று அதில் நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது. இந்த தோல்விகள் ஒரு புறம் அழுத்தம் கொடுக்க, மறுபுறம் அந்த அணியின் உள்விவகாரங்கள் பூதாகரமாக மாறி உள்ளது. அதற்கு சிஎஸ்கே முக்கிய காரணமாக மாறி இருக்கிறது.
2024 ஐபிஎல் தொடருக்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் அணியில் பிரச்சனைகள் துவங்கி விட்டன. அந்த அணிக்கு ஐந்து ஐபிஎல் கோப்பைகள் வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவை பதவியில் இருந்து நீக்கி விட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை அழைத்து வந்து கேப்டன் ஆக்கியது அணி நிர்வாகம். இந்த முடிவு ரோஹித் சர்மா மட்டுமின்றி அந்த அணியின் முக்கிய வீரர்களான பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரை சந்தித்த அந்த அணி முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தது. புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் இந்த தோல்விகளுக்கு காரணம் என அனைத்து தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பெரும்பாலான ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.
இதற்கிடையே அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகள் என்ற நிலையில் இருந்தது, கேப்டன் ஹர்திக் பாண்டியா தன்னம்பிக்கை பெற்று இருந்தார். இதை அடுத்து அந்த அணியில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் வெற்றிகளால் முடிவுக்கு வந்ததாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு வந்தது. ஆனாலும், ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் தனிப்பட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டாலும் அணியின் நடவடிக்கைகளில் மூத்த வீரர்களாக எந்த ஈடுபாட்டையும் கட்டவில்லை.
இந்த நிலையில் அந்த அணி ஆறாவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது. இந்த இரண்டு அணிகளும் ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்ற அணிகள் என்பதால் இந்தப் போட்டி மிக முக்கியமான மோதலாக இருந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி ஓவருக்கு 9 ரன்கள் என்ற அளவில் சேர்த்தது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் சிவம் துபே ஸ்பின்னர்களின் ஓவர்களில் அதிக சிக்ஸ் அடிப்பார் என பயந்த ஹர்திக் பாண்டியா முகமது நபி மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் ஆகிய இருவருக்கும் ஓவர்கள் மீதமிருந்தும் அவர்களை பயன்படுத்தாமல் தானே பந்து வீசினார். ஹர்திக் பாண்டியா வேகப் பந்துவீச்சாளராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் இல்லை என்றாலும் போட்டியை மாற்றுவதாக நினைத்து தானே பந்து வீசினார்.
மேலும், கடைசி ஓவரில் மற்றொரு வேகப் பந்துவீச்சாளரான ஆகாஷ் மதவாலை பயன்படுத்தாமல் தானே பந்து வீசினார். அது மிகத் தவறான முடிவாக மாறியது. தோனி அந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார். சிஎஸ்கே அணி அந்த ஒரு ஓவரில் மட்டும் 26 ரன்கள் குவித்தது. 20 ஓவர்களில் 206 ரன்கள் குவித்தது சிஎஸ்கே அணி. ஹர்திக் பாண்டியா செய்த அந்த தவறால் பின்னடைவை சந்தித்த மும்பை அணி சரியாக 20 ரன்களில் தோல்வி அடைந்தது. அதன் மூலம் ஹர்திக் பாண்டியா தன் அணி பந்துவீச்சாளர்களை நம்பாமல் தானே பந்து வீசியதால் தான் மும்பை அணி தோற்றது.
இதை அடுத்து ஏற்கனவே அணிக்குள் இருந்த பிளவுகள் பெரிதாகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியுடனான போட்டிக்கு முன்பு வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் பிரச்சனைகளே இல்லை என சொல்லப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணி பெற்ற வெற்றியால் மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் கலகம் துவங்கி இருக்கிறது. ஹர்திக் பாண்டியா கடும் அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.