மும்பை : 2024 ஐபிஎல் தொடருக்கு பெரிய பாதிப்பு வராத வகையில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து இப்போதே சலசலப்பு தொடங்கி விட்டது.
இந்தியாவில் கடந்த மூன்று நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட போதும் ஐபிஎல் தொடர் குறித்து பெரிய விவாதம் நடைபெற்றது. 2009 மற்றும் 2014 நாடாளுமன்ற தேர்தல்களின் போது அப்போதைய காங்கிரஸ் அரசு தேர்தலின் போது ஐபிஎல் தொடரை நடத்த ஒத்துழைப்பு அளிக்க மறுத்தது.

அதனால் 2009 ஐபிஎல் தொடர் முற்றிலுமாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. 2014 ஐபிஎல் தொடரின் ஒரு பகுதி ஐக்கிய அரபு நாட்டில் நடத்தப்பட்டது. ஆனால், 2019இல் பாஜக அரசு நாடாளுமன்ற தேர்தலின் போது ஐபிஎல் தொடரை நடத்த சம்மதம் தெரிவித்து இருந்தது. அப்போது ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக இந்தியாவிலேயே நடத்தி முடிக்கப்பட்டது.
அதே போல தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்கெடுப்புக்கு நடுவே ஐபிஎல் தொடர் இந்தியாவிலேயே நடைபெற உள்ளது. ஐபிஎல் அட்டவணை ஏப்ரல் 7ஆம் தேதி வரை முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் வெளியாகி உள்ள நிலையில், அந்த தேதிகளில் தேர்தல் நடக்கும் இடங்களை தவிர்த்து வேறு மாநிலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் வகையில் பிசிசிஐ ஐபிஎல் அட்டவணையை திட்டமிடும் என கூறப்படுகிறது.
இந்த முறை ஏழு கட்டமாக நடத்தப்பட உள்ள நாடாளுமன்ற தேர்தல் தேதிகளில் ஒரு தேதி மட்டுமே வார இறுதி நாட்களில் வருகிறது. மற்ற ஆறு தேதிகளும் வேலை நாட்களிலேயே வருகிறது. அதிக மக்கள் வாக்கு செலுத்த வர வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி தேதிகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இது ஒரு வகையில் ஐபிஎல் தொடருக்கு சாதகமாக அமையும்.
தேர்தல் தேதிகளில் வாக்கெடுப்பு நடக்கும் மாநிலங்களை தவிர்த்து வேறு இடங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் விடுமுறை நாள் என்பதால் தேர்தல் நாளில் எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் விடுமுறை அளிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஐபிஎல் போட்டிகளுக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மேலும், தீவிர அரசியலுக்குள் சாதாரண மக்களை வர விடாமல் ஐபிஎல் போட்டிகள் தடுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதே சமயம், சாமானிய மக்கள் தேர்தல் பிரசாரங்களால் சோர்வடைந்தால் ஐபிஎல் போட்டிகளை காண்பார்கள் எனவும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.