மும்பை : இந்திய அணியில் இருந்து தாமாக விலகிய இஷான் கிஷன் அடுத்து 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு, அப்படியே 2024 டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெறலாம் என கனவு கண்டு வருகிறார். ஆனால், அதற்கான முதல் அடியே சொதப்பி இருக்கிறது.
2024 ஐபிஎல் தொடருக்காக ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து, இஷான் கிஷன் தாமாகவே பயிற்சி செய்து வந்தார். பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் சார்பில் ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரில் ஆடுமாறு கூறியும் அவர் அதை நிராகரித்தார்.

இந்த நிலையில் 2024 ஐபிஎல் தொடருக்கு முன்னோட்டமாக டிஒய் பாட்டில் எனும் மும்பை மாநில டி20 தொடர் ஒன்றில் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் இஷான் கிஷன் ஆர்பிஐ அணிக்காக ஆடினார். ரூட் மொபைல் அணிக்கும் ஆர்பிஐ அணிக்கும் நடந்த போட்டியில் இஷான் கிஷன் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ரூட் மொபைல் அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆர்பிஐ அணி இஷான் கிஷனை நம்பியே இருந்தது. ஆனால், அவர் 12 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவர் இரண்டு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்தார். தேகாலே என்ற வீரர் 17 பந்துகளில் 42 ரன்கள் குவித்து இருந்தார்.
உள்ளூர் வீரர் கூட அதிக ரன்கள் எடுத்த நிலையில் சர்வதேச அனுபவம் கொண்ட இஷான் கிஷன் பேட்டிங் செய்யவே திணறினார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்காத நிலையில் ஆர்பிஐ அணி 16.3 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரூட் மொபைல் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இந்த சுமாரான ஆட்டத்தை அடுத்து இஷான் கிஷன் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. இந்திய அணி நிர்வாகத்தை எதிர்த்து செயல்பட்டு வரும் அவர் தாமாக எடுத்த முடிவும் சரியாக அமையவில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.