தோனி, கோலி ரசிகர்கள் செய்த செயல்.. நம்பவே முடியலை.. வாயை பிளந்த இங்கிலாந்து வீரர்
மும்பை : 2024 ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ள நிலையில் அதில் பங்கேற்க பல நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஜோஸ் பட்லர் இந்தியா வந்து பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில் ஐபிஎல் குறித்து பேசிய போது, தோனி, விராட் கோலிக்கு இருக்கும் ரசிகர்கள் குறித்தும், அவர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் தன் வியப்பை வெளிப்படுத்தினார். பிரபலமான அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் 10 வயது ரசிகர்கள் போல இந்திய ரசிகர்கள் நடந்து கொள்வதாக கூறி இருக்கிறார். அது போன்ற ஒரு அடையாளம் நமக்கும் கிடைத்தால் நாமும் பெரிய நட்சத்திரம் போல உணரலாம் என தனது பொறாமையை வெளிப்படுத்தினார் ஜோஸ் பட்லர்.

இது குறித்து ஜோஸ் பட்லர் பேசுகையில், "ஐபிஎல் தொடருக்கு இருக்கும் ரசிகர்கள் எந்த விதத்திலும் ஒப்பிட முடியாதவர்கள். தோனி, விராட் கோலி போன்ற வீரர்கள் மைதானத்தில் நடந்து சென்றால் கூட டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சியில் இருக்கும் 10 வயது சிறுவர்கள் போல ரசிகர்கள் கூக்குரல் எழுப்புகிறார்கள். ரசிகர்கள் எழுப்பும் அந்த குரல் நம்ப முடியாததாக உள்ளது. தோனி, கோலி விளையாடக் கூட இல்லை. ஆடுகளத்தில் நடந்து வரும் போதே ரசிகர்கள் ஆர்பரிக்கிறார்கள்" என்றார்.

மேலும், "அவர்கள் விமான நிலையத்தில் பாதுகாவலர்களுடன் செல்லும் போது செல்பி எடுக்கவும், அவர்கள் அருகே செல்லவும் அனைவரும் வருகிறார்கள். அவர்கள் முதல் தர பிரபலங்கள். அவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள், அதுவும் சமூக ஊடகங்களின் வரவுக்கு பின்னர் அற்புதமாக உள்ளது. அதை பார்க்க நன்றாக உள்ளது" என்றார் பட்லர்.
"சில சமயம் நம்மை நாமே அறைக்குள் அடைத்து வைக்க முயற்சி செய்கிறோம். அவர்களைப் போல நமக்கு ரசிகர்கள் இல்லை. ஆனால், அது போன்ற ஒரு அடையாளம் இருந்தால் நாமும் பெரிய நட்சத்திரம் போல உணரலாம். கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தேவை. இந்திய அணியின் பெரிய நட்சத்திர வீரர்களை ரசிகர்கள் பெரிய அளவில் பார்க்கிறார்கள்" என்றார் ஜோஸ் பட்லர்.


Click it and Unblock the Notifications