ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற பத்தாவது லீக் ஆட்டத்தில் ஆர் சி பி அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கே கே ஆர் அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெங்களூருவில் கேகேஆர் அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியதே கிடையாது. இந்த சோகத்தை மாற்ற வேண்டிய உத்வேகத்தில் விராட் கோலி பேட்டிங்கில் களமிறங்கினார்.

விராட் கோலி தொடக்கம் முதல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்து வந்தார். ஆனால் கேப்டன் டுபிளசிஸ் அதிரடியாக ஆட முற்பட்டு ஒரு சிக்சர் மட்டும் அடித்து 8 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேமரான் கிரீன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார். நான்கு பவுண்டரி, 2 சிக்சர் என 21 பந்துகளில் 33 ரன்கள் அவர் விளாசிய நிலையில் ரஸில் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
இதேபோன்று பார்மில் இல்லாத மேக்ஸ்வெலும் 19 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து பெவிலன் திரும்பினார். ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் சரிய தொடங்கிய நிலையில், விராட் கோலி மட்டும் தனியாளாக நின்று அபாரமாக விளையாடினார். 4 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் என 59 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார்.இறுதியில் தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார்.இதில் மூன்று சிக்சர் அடங்கும்.
இதனால் ஆர் சி பி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கே கே ஆர் அணி களம் இறங்கியது. நடப்பு சீசனில் புத்தம் புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ள கே கே ஆர் அணி ஆக்ரோச ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் 5 சிக்சர், இரண்டு பவுண்டரி என ஆர் சி பி பந்துவீச்சை பறக்க விட்டார்.
இதன் மூலம் 22 பந்துகளில் அவர் 47 ரன்கள் விளாசினார். இதேபோன்று இங்கிலாந்து வீரர் ஃபில் சால்ட்டும் 20 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் முதல் விக்கெட்டுக்கு கொல்கத்தா அணி 6.3 ஓவர்களில் 86 ரன்களை சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது. இதை அடுத்து இருவரும் அடுத்தடுத்த ஆட்டம் இழக்க ஆர் சி பி அணி ஆட்டத்திற்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தமிழக கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆர் சி பி யின் கனவை சுக்கு நூறாக உடைத்தார். நான்கு சிக்ஸர், 3 பவுண்டரி என 30 பந்துகளில் அவர் அரை சதம் அடித்தார். இதேபோன்று கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 24 பந்துகளில் 39 ரன்கள் சேர்க்க கே கே ஆர் அணி 16.5 ஓவர்கள் எல்லாம் மூன்று விக்கெட்டுகள் இழந்து வெற்றியை பெற்றது. இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணி ஒரு முறை கூட கேகேஆரை தங்களது சொந்த மண்ணில் வீழ்த்தியதில்லை.
ர்.