விசாகப்பட்டினம் : கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற 273 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணிக்கு, சுனில் நரைன் - பில் சால்ட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரில் நிதானம் காத்த நிலையில், 2வது ஓவரிலேயே 2 பவுண்டரியை விளாசி பில் சால்ட் அதிரடியை தொடங்கினார். தொடர்ந்து கலீல் அஹ்மத் வீசிய 3வது ஓவரில் 3 பவுண்டரிகள் உட்பட 15 ரன்கள் விளாசப்பட்டது.

தொடர்ந்து இஷாந்த் சர்மா வீசிய 4வது ஓவரில் 3 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 26 ரன்களை சுனில் நரைன் விளாசினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சால்ட் 18 ரன்களில் வெளியேற, 18 வயதேயான அறிமுக வீரர் ரகுவன்ஷி களமிறக்கப்பட்டார். இவரும் நரைனும் இணைந்து டெல்லி பவுலர்களை வெளுத்து கட்டினார். சிறப்பாக விளையாடிய சுனில் நரைன் 21 பந்துகளில் அரைசதம் விளாசினார். அதேபோல் 6 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணியின் ஸ்கோர் 88 ரன்களாக இருந்தது.
இதன்பின் கேகேஆர் அணியின் அதிரடி அடுத்த கட்டத்திற்கு சென்றது. ஒவ்வொரு ஓவரிலும் 2 சிக்ஸ் அல்லது 2 பவுண்டரி அடிப்பதில் கேகேஆர் பேட்ஸ்மேன்கள் தீவிரமாக இருந்தனர். அதனை சிறப்பாக செயல்படுத்த, 11 ஓவர்கள் முடிவில் அந்த அணியின் ஸ்கோர் ஒரு விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களாக இருந்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 39 பந்துகளில் 7 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுபக்கம் சிறப்பாக ஆடிய ரகுவன்ஷி 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவரும் சிக்சர் அடிக்க முயற்சித்து 54 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ரஸ்ஸல் - ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி இணைந்தது. வழக்கம் போல் ரஸ்ஸல் அதிரடியாக சிக்சரும் பவுண்டரியுமாய் பொளந்து கட்டினார். 15.2 ஓவர்களின் முடிவிலேயே கேகேஆர் அணியின் ஸ்கோர் 200 ரன்களை எட்டியது. தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 18 ரன்களில் வெளியேற, கடைசி நேரத்தில் ரிங்கு சிங் - ரஸ்ஸல் கூட்டணி இணைந்தது.
தொடந்து 19வது ஓவரில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 25 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த ஓவரின் கடைசி பந்தில் ரிங்கு சிங் 8 பந்தில் 26 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 19 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி ஓவரை வீச இஷாந்த் சர்மா அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரஸ்ஸல் போல்டாகி 41 ரன்களில் வெளியேற, தொடர்ந்து 3வது பந்தில் ரமன்தீப் சிங் 2 ரன்களில் வெளியேறினார். இந்த ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், கேகேஆர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்தது.