4,6,6,4,4,4.. ஒரே ஓவரில் 28 ரன்கள்.. வாங்கி கட்டிக்கொண்ட வெங்கடேஷ் ஐயர்.. ரிஷப் பண்ட் ரியல் கம்பேக்!
விசாகப்பட்டினம் : வெங்கடேஷ் ஐயர் வீசிய ஒரே ஓவரில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசி ரிஷப் பண்ட் அசத்தியுள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்களை விளாசியது. அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 39 பந்துகளில் 85 ரன்களும், ரகுவன்ஷி 54 ரன்களும், ரஸ்ஸல் 41 ரன்களும் விளாசினர். டெல்லி அணி தரப்பில் நார்கியே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் 273 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் இளம் வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசி அசத்தினர். இதனால் 6 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 51 ரன்களை சேர்த்திருந்தது.
தொடர்ந்து ரஸ்ஸல் வீசிய 7வது ஓவரில் ரிஷப் பண்ட் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாச, மறுபக்கம் வருண் சக்கரவர்த்தி பவுலிங்கில் ஸ்டப்ஸ் 2 சிக்சரை விளாசி மிரட்டினார். 11 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்களை சேர்த்திருந்தது. இந்த நிலையில் கேகேஆர் அணி தரப்பில் வெங்கடேஷ் ஐயர் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். அந்த ஓவரை ரிஷப் பண்ட் எதிர்கொண்டார்.
அந்த ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க, 2வது பந்தில் சிக்சருக்கு பறந்தது. தொடர்ந்து 3வது பந்திலும் சிக்சருக்கு செல்ல, அடுத்த 3 பந்துகளும் பவுண்டரிக்கு சென்றது. இதனால் அந்த ஓவரிலும் மட்டும் 28 ரன்கள் விளாசப்பட்டது. இதன் மூலமாக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 23 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த ரிஷப் பண்ட் 25 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி பவுலிங்கில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியிலேயே ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து அசத்தினாலும், இன்றைய ஆட்டத்தில் ஃபீல்டிங்கை பயன்படுத்தி ருத்ர தாண்டவம் ஆடியது ரிஷப் பண்டின் ரியல் கம்பேக்காக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications