கொல்கத்தா : அடுத்தடுத்து 2 போட்டிகளில் அடைந்த தோல்வியால் எந்த கவலையும் இல்லை என்று லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்தது. கேகேஆர் அணி தரப்பில் மிட்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய கொல்கத்தா அணியின் பில் சால்ட் 47 பந்துகளில் 3 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 89 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். அதேபோல் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 38 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்த தோல்வி குறித்து லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பேசுகையில், சில நாட்கள் மொத்தமாக சொதப்பும். இது அப்படியான ஒருநாள் தான். இந்த தோல்வியை ஏற்று கொள்ள முடியவில்லை. ஐபிஎல் தொடரின் ஒரு கட்டத்தில் ஒவ்வொரு அணியும் இதுபோன்ற சூழலில் சிக்குவதை பார்த்திருக்கிறோம். நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளில் தவறை திருத்தி கம்பேக் கொடுப்போம்.
நாங்கள் பவுலிங் செய்யும் போது பந்து கையில் இருந்து நழுவ தொடங்கியது. அதேபோல் பேட்டிங்கிலும் எங்களின் ஷாட்கள் சரியாக செயல்படுத்தவில்லை. கொத்து கொத்தாக விக்கெட்டை பறி கொடுத்தோம். கூடுதலாக ரன்கள் சேர்க்க தவறிய போதே, ஆட்டத்தை தவறவிட்டதாக நினைக்கிறேன். ஷமார் ஜோசப் சிறப்பான வேகத்தில் வீசுகிறார். இதுபோன்ற தவறுகள் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பது சகஜம் தான்.
அவர் இன்னும் கொஞ்சம் கன்சிஸ்டன்சியில் பணியாற்ற வேண்டும். அடுத்தடுத்து 2 போட்டிகளில் அடைந்த தோல்வியால் எங்களுக்கு எந்த பயமோ, பதற்றமோ கிடையாது. கடந்த 2 போட்டிகளிலும் எங்கு தவறு நடந்தது என்பதை கண்டறிய வேண்டும். அதேபோல் கடந்த 2 போட்டிகளில் 160 ரன்களை பேட்டிங்கில் எடுப்பதே எங்களுக்கு சிரமமாக இருந்தது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார்.