மனுஷங்களாடா நீங்க.. பஞ்சாப் பவுலர்களை பஞ்சராக்கிய நரைன், சால்ட்.. 261 ரன்கள் குவித்த கேகேஆர்!
கொல்கத்தா : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெற 262 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய சுனில் நரைன் - பில் சால்ட் கூட்டணி தொடக்கம் முதலே அதிரடியில் பொளந்து கட்டியது. இவர்கள் இருவரின் அதிரடியால் 3.5 ஓவர்களில் கேகேஆர் அணியின் ஸ்கோர் 50 ரன்களை கடந்தது.

இதனிடையே சுனில் நரைன் கொடுத்த ஒரு கேட்சை ஹர்ப்ரீத் பராரும், பில் சால்ட்-க்கு 2 கேட்ச்களையும் பஞ்சாஒப் ஃபீல்டர்கள் தவறவிட்டனர். இதனை பயன்படுத்தி கொண்ட சுனில் நரைன் 23 பந்துகளில் அரைசதம் அடிக்க, மறுபக்கம் பில் சால்ட் 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். பஞ்சாப் அணியின் எந்த வீரர்கள் பவுலிங் செய்தாலும், ஓவருக்கு ஒரு சிக்ஸ் நிச்சயம் என்ற ரீதியில் இருவரும் பொளந்து கட்டினர்.
10 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணியின் ஸ்கோர் 137 ரன்களை குவித்தது. இந்த நிலையில் ராகுல் சஹர் வீசிய 11வது ஓவரில் சுனில் நரைன் 32 பந்துகளில் 71 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து பில் சால்ட் 37 பந்துகளில் 75 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த ரஸ்ஸல் அதிரடியாக சில சிக்சர்களை விளாசிய நிலையில், அர்ஷ்தீப் சிங்கின் சிறப்பான பவுன்சரால் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனிடையே கேகேஆர் அணியின் ஸ்கோர் 16 ஓவர்கள் முடிவில் 206 ரன்களை எட்டியது. தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தன் பங்கிற்கு சாம் கரண் வீசிய 18வது ஓவரில் 3 சிக்ஸ், ஒரு ஃபோர் உட்பட 24 ரன்களை விளாசினார். தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் வீசிய 19வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் 10 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ரிங்கு சிங் களம் புகுந்தார்.
இந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரை வீச ஹர்சல் படேல் வந்தார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரிங்கு சிங் பவுண்டரி அடிக்க, 2வது பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் கடைசி 4 பந்துகளில் 8 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது. இந்த ஐபிஎல் தொடரில் 6வது முறையாக 250 ரன்கள் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications