KKR vs RCB : கடைசி 5 ஓவரில் 73 ரன்கள்.. சொதப்பிய சிராஜ், யாஷ் தயாள்.. ஆர்சிபி அணிக்கு சாதனை இலக்கு!
கொல்கத்தா : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி வெற்றிபெற 223 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கியுள்ளது. ஆர்சிபி அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியும் நாக் அவுட் போட்டியை போல் இருப்பதால், இந்த போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் கொல்கத்தா அணி தரப்பில் சால்ட் - சுனில் நரைன் கூட்டணி களமிறங்கியது.

ஆர்சிபி அணி தரப்பில் சிராஜ் வீசிய முதல் ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், பில் சால்ட் சிக்ஸ், பவுண்டரி என்று பொளந்து கட்டினார். 3 ஓவர்களில் கேகேஆர் அணி 27 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ஃபெர்குசன் வீசிய 4வது ஓவரில் 6, 4, 4, 6, 4, 4 என்று 28 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் கேகேஆர் அணி 4 ஓவர்களிலேயே 55 ரன்களை எட்டியது. தொடர்ந்து சிராஜை அட்டாக் செய்த நினைத்த சால்ட், சிக்சர் அடிக்கும் முயற்சியில் 14 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
பின்னர் யாஷ் தயாள் வீசிய 6வது ஓவரில் சுனில் நரைன் 10 ரன்களிலும், ரகுவன்ஷி 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் கேகேஆர் அணி 6 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதன்பின் ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் கைகள் ஓங்கியது. தொடர்ந்து கரண் சர்மாவை அட்டாக்கில் கொண்டு வந்தார் டூ பிளசிஸ். அவர் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை ஸ்ரேயாஸ் ஐயர் அடிக்க, கேமரூன் க்ரீன் பவுலிங்கில் வெங்கடேஷ் ஐயர் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் நிதானம் காக்க, ரிங்கு சிங் அதிரடியில் வெளுத்து கட்டினார். ஆனால் ஃபெர்குசன் பவுலிங்கில் ரிங்கு சிங் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடி வீரர் ரஸ்ஸல் வந்தார். 16 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 155 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் யாஷ் தயாள் வீசிய 17வது ஓவர் கேகேஆர் அணிக்கு சாதகமாக மாறியது. அந்த ஓவரில் 5 ஒய்டு, நோ-பால், பை, பவுண்டரி என்று மொத்தமாக 22 ரன்களை விளாசப்பட்டது. இதனிடையே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
ஆனால் அடுத்த ஓவரிலேயே ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க, ரமன்தீப் சிங் களமிறங்கினார். இவர் சிராஜ் வீசிய 19வது ஓவரில் 2 சிக்ஸ், ஒரு ஃபோர் உட்பட 20 ரன்களை விளாசினார். இதனால் கேகேஆர் அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. பின்னர் கடைசி ஓவரில் 3 பவுண்டரி உட்பட 16 ரன்கள் சேர்க்கப்பட, 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.


Click it and Unblock the Notifications