கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி பந்தில் 224 ரன்கள் வெற்றி இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர் ஜோஸ் பட்லர் காயத்துடன் ஆடிய நிலையில் 60 பந்துகளில் 107 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்று ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. சுனில் நரைன் 56 பந்துகளில் 109 ரன்கள் குவித்து இருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 224 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 97 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இருந்து 121 ரன்களுக்கு 6 விக்கெட்கள் என்ற அளவிற்கு சரிந்தது. அப்போது ராஜஸ்தான் அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற நிலை இருந்தது. ஜோஸ் பட்லரை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் சொற்ப ரன்களில் விக்கெட்களை பறிகொடுத்து இருந்தனர்.
அப்போது எட்டாவது வரிசையில் இறங்கிய ரோவ்மன் போவெல் 13 பந்துகளில் 26 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு சற்று அருகே கொண்டு சென்றார். ஆனால், போவெல் ஆட்டமிழந்த பின் ராஜஸ்தான் அணியில் ரன் குவிக்கும் திறன் கொண்ட பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை.
அந்த நிலையில் கடைசி மூன்று ஓவர்களில் 46 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜோஸ் பட்லர் ஒரு பந்தை கூட மற்ற பேட்ஸ்மேனுக்கு கொடுக்காமல் தானே ஆடினார். கடைசி மூன்று ஓவரின் 18 பந்துகளையும் அவரே ஆடினார். அவரால் வலியால் சரியாக ஓட முடியவில்லை. அந்த நிலையிலும் 7 ரன்களை ஓடியே எடுத்தார். அந்த மூன்று ஓவர்களில் நான்கு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்து இருந்தார்.
கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வருண் சக்கரவர்த்தி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். அதன் பின் சிங்கிள் ரன் ஓடாமல் 2 ரன் ஓட வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருந்து ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் ஓடினார். பின்னர் கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் அதையும் செய்து ராஜஸ்தான் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். 60 பந்துகளில் 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.