கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய 2024 ஐபிஎல் லீக் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் டாஸ் நிகழ்வின் போது ஸ்ரேயாஸ் ஐயர் செய்த ஒரு விஷயம் அனைவரையும் ஒரு கணம் ஸ்தம்பிக்கச் செய்தது.
இந்தப் போட்டி நடந்த பிட்ச் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. இதற்கு முந்தைய போட்டியிலும் சேஸிங் செய்த அணியே வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில் டாஸ் வெல்லும் அணி எப்படியும் பந்துவீச்சை தான் தேர்வு செய்யும் என்ற நிலை இருந்தது.

எனவே, இந்தப் போட்டியில் டாஸ் வென்றால் போட்டியில் பாதி வெற்றியைப் பெற்றது போல என்பதால் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வெல்ல வேண்டும் என நினைத்தார். டாஸ் போட வேண்டி ரெப்ரீயிடம் இருந்து காசை வாங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதற்கு முத்தம் கொடுத்தார். பின்னர் காசை சுண்டினார். சாம்சன் "ஹெட்ஸ்" என கேட்டார். அவர் கேட்டது போலவே காசு அவருக்கு சாதகமாக விழுந்தது. அதனால், ஸ்ரேயாஸ் ஐயர் ஏமாற்றம் அடைந்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் முத்தம் கொடுத்ததை சஞ்சு சாம்சன் கவனிக்கவில்லை. பின்னர் அங்கிருந்த வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அது குறித்து சஞ்சு சாம்சனிடம் கூறினார். அதைக் கேட்ட அவர் மிரண்டு போய் ஸ்ரேயாஸ் ஐயரை பார்த்தார். பின்னர் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் எதிர்பார்த்ததை போலவே பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கொல்கத்தா அணியின் துவக்க வீரர் பில் சால்ட் 13 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து போட்டியின் துவக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சாதகமாக அமைந்தது. இந்த இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் நிலையில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.