சென்னை : ஐபிஎல் இறுதிப்போட்டியில் குறைந்த ரன்கள் சேர்த்த அணிக்கான பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக ஐதராபாத் அணிக்கு சிஎஸ்கே ரசிகர்கள் நன்றி கூறி வருகின்றனர்.
கேகேஆர் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேகேஆர் அணி தரப்பில் ரஸ்ஸல் 3 விக்கெட்டுகளையும், ஹர்சித் ராணா மற்றும் மிட்சல் ஸ்டார்க் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

லீக் போட்டிகளின் போது பவர் பிளே ஓவர்களிலேயே 100 ரன்களை குவித்த ஐதராபாத் அணி, ஐபிஎல் பைனலில் 100 ரன்களை சேர்ப்பதற்குள் திண்டாடியது. இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் நேரில் அமர்ந்து போட்டியை பார்த்த ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் சோகமான நிலையில் காணப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் பைனலில் 113 ரன்களை குவித்ததன் மூலமாக ஐதராபாத் அணி சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. இதுவரை நடந்த 16 ஐபிஎல் பைனலில் விளையாடிய அணிகளில் மிகவும் குறைந்த ஸ்கோரை ஐதராபாத் அணி பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பாக இந்த சாதனை சிஎஸ்கே அணியின் வசம் இருந்தது.
2013ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் பைனலில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ஐதராபாத் அணி முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் ஆரஞ்ச் ஆர்மியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் எதிரணி ரசிகர்களை சைலண்ட் செய்யும் திறமையை கொண்ட பேட் கம்மின்ஸை, ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கவுதம் கம்பீர் இருவரும் சேர்ந்து சைலண்ட் செய்த சம்பவம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இதனால் கேகேஆர் அணியின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.