சென்னை : ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது அம்மா சொன்ன வார்த்தைகளை பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் ஐதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 176 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்த போதும், ஜாம்பவான் ஸ்பின்னர்கள் இல்லாமல் பார்ட் டைம் ஸ்பின்னர்களை வைத்து கம்மின்ஸ் செய்த மேஜிக் பலரையும் மிரள வைத்துள்ளது.

அதிலும் ஷாபாஸ் அஹ்மத் பவுலிங்கில் ஸ்பின்னர்களுக்கு உதவி கிடைப்பதை அறிந்து உடனடியாக அபிஷேக் சர்மாவை அட்டாக்கில் கொண்டு வந்தது தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த சீசனில் ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா 4 ஓவர்களை வீசிவது இதுவே முதல்முறையாகும். இங்கு தான் கம்மின்ஸ் கேப்டனாக மிரட்டியுள்ளார்.
எந்த வீரரிடம் என்ன திறமை இருக்கிறது, எந்த வீரரை எப்போதும் பயன்படுத்த வேண்டும், டி20 கிரிக்கெட்டில் எவ்வளவு வேகமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார் கம்மின்ஸ். இதன் மூலம் ஐதராபாத் அணியை 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் தனது தாய் சொன்ன வார்த்தைகள் குறித்து கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், "போ.. உலகத்தை எதிர்கொள்.. யாரோ ஒருவர் இந்த உலகத்தில் அற்புதமான விஷயங்களை செய்யப் போகிறார்கள்.. அது ஏன் நீயாக இருக்கக் கூடாது" என்று சொன்னதாக தெரிவித்துள்ளார். அமேசானில் வெளியான தி டெஸ்ட் சீசன் 3 தொடரில் இதனை கம்மின்ஸ் பகிர்ந்துள்ளார்.
தற்போது தாயின் வார்த்தைகளை கம்மின்ஸ் நிறைவேற்றி வருகிறார் என்றே சொல்லலாம். ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை ஆகிய கோப்பைகளை கம்மின்ஸ் வென்றுவிட்டார். தற்போது உலகின் சிறந்த டி20 லீக் தொடரில் கேப்டனாக கம்மின்ஸ் களமிறங்கி முதல் சீசனிலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். தாய் சொன்ன அற்புதங்களை மகன் கம்மின்ஸ் செய்வது உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.