அடப்பாவிகளா.. 1.30 மணி நேரமா.. விருது விழாவை தாமதப்படுத்திய ஐபிஎல் நிர்வாகம்.. என்ன நடந்தது?
சென்னை : ஐபிஎல் தொடருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக நடத்தப்பட்ட விவகாரம் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஐபிஎல் பைனலில் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலமாக கேகேஆர் அணி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் ஐதராபாத் அணி நிர்ணயித்த 114 ரன்கள் இலக்கை கேகேஆர் அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து எட்டியது.

இதன் மூலமாக ஐபிஎல் பைனலில் குறைந்த பந்துகளில் சேஸிங் செய்த அணி என்ற சாதனையையும் கேகேஆர் அணி படைத்தது. இந்த வெற்றிக்கு பின் கேகேஆர் அணியின் வீரர்கள், அணி நிர்வாகிகள், உரிமையாளர் ஷாருக் கான் உள்ளிட்டோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பலரும் விருது விழாவை பார்த்துவிட்டு செல்லலாம் என்று காத்திருந்தனர். ஆனால் விருது விழா நடப்பதற்கு முன்பாக ஏராளமான விஷயங்களை ஒளிபரப்பாளர்கள் பேசிக் கொண்டே இருந்தனர். இரவு 10.23 மணிக்கு ஆட்டம் முடிவடைந்த நிலையில், விருது வழங்கும் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்ற தகவலே வெளியிடப்படவில்லை.
இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பலரும் விரக்தியில் புறப்பட தொடங்கினர். இதன்பின் இறுதியாக 11.53 மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. சுமார் 90 நிமிடங்கள் தாமதமானதற்கான காரணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் சோசியல் மீடியாவிலும் ரசிகர்கள் ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஐபிஎல் நிர்வாகத்தை சாட தொடங்கினர்.
ஐபிஎல் நிர்வாகக் குழு வேண்டுமென்றே தாமதமாக விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன. இதன்பின் 11.53 மணிக்கு தொடங்கிய விருது வழங்கும் நிகழ்ச்சி 12.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. இதனால் ஆட்டம் எதிர்பார்த்ததை விடவும் முன்கூட்டியே முடிவடைந்ததால், திட்டத்தை மாற்றாமல் வேண்டுமென்றே டிஆர்பி-க்காக தாமதமாக நடத்தப்பட்டதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications