அகமதாபாத் : கேகேஆர் அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் சொந்த ஊர் சென்றுள்ள நிலையில், குவாலிஃபையர் போட்டியில் தொடக்க வீரராக யார் களமிறக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிளே ஆஃப் சுற்றின் குவாலிஃபையர் 1 போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடக்கவுள்ளது. இந்த போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடவுள்ளது. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதவுள்ளதால், எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.

ஏனென்றால் இரு அணிகளிலும் பவர் ஹிட்டர்கள், ஸ்பின்னர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே சிறந்த ஃபார்மில் உள்ளனர். ஆனால் கேகேஆர் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேகேஆர் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய பில் சால்ட் 12 போட்டிகளில் விளையாடி 435 ரன்களை விளாசி இருக்கிறார்.
இவரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைத்ததால், வேறு வழியின்றி நாடு திரும்பினார். அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராகவும் பில் சால்ட் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். இவருக்கு மாற்றாக கேகேஆர் அணியில் குர்பாஸ், கேஎஸ் பரத் இருவரும் இருக்கின்றனர். கடந்த சீசனில் குர்பாஸ் அசத்தலாக பேட்டிங் செய்திருந்தாலும், இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதேபோல் கேஎஸ் பரத் பேட்டிங்கில் எப்படியான ஃபார்மில் இருக்கிறார் என்பது கவுதம் கம்பீருக்கு மட்டுமே தெரியும். அதுமட்டுமல்லாமல் அகமதாபாத் மைதானத்தில் கேகேஆர் அணியின் சுனில் நரைன் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 3 முறையும் டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். அந்த மைதானத்தில் கூடுதல் ஸ்விங் இருக்கும் என்பதால், தொடக்க வீரர்களுக்கு சிக்கல் தான்.
இதனால் கேகேஆர் அணிக்கு முக்கியமான நேரத்தில் சிக்கல் எழுந்துள்ளது. இதனை பயன்படுத்தி ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் வியூகம் வகுத்து களமிறங்குவார் என்று தெரிகிறது. ஏனென்றால் அகமதாபாத் மைதானத்தில் புவனேஷ்வர் குமார் விளையாடிய 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.