சென்னை : கேகேஆர் அணியின் அசத்தலான பவுலிங்கால் உற்சாகமான ஷாருக் கான் மகள் சுகானா துள்ளிக்குதித்து கொண்டாடிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியில் ஐதராபாத் அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி அளிக்கப்பட்டு கொண்டே இருந்தது. தொடக்கம் முதலே கேகேஆர் அணியின் பவுலிங்கில் தாக்கு பிடிக்க முடியாமல் ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

குறிப்பாக தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா 2 ரன்களிலும், ட்ராவிஸ் ஹெட் டக் அவுட்டாகியும் வெளியேறினர். பின்னர் வந்த வீரர்களில் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், ஐதராபாத் அணி மொத்தமாக 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக ஐபிஎல் பைனல் வரலாற்றில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை ஐதராபாத் படைத்துள்ளது.
கேகேஆர் அணியின் பவுலிங்கில் ரஸ்ஸல் 3 விக்கெட்டுகளையும், மிட்சல் ஸ்டார்க் மற்றும் ஹர்சித் ராணா இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். லீக் போட்டிகளில் 6 ஓவர்களில் சாதாரணமாக 120 ரன்களை விளாசி வந்த ஐதராபாத் அணி, ஐபிஎல் பைனலில் வெறும் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கேகேஆர் அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியை காண கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாருக் கான் மற்றும் அவரின் மனைவி கவுரி கான் இருவரும் சேப்பாக்கம் மைதானம் வந்துள்ளனர். அதேபோல் ஷாருக் கான் மகளும் நடிகையுமான சுகானா, பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, ஜுஹி சாவ்லா உள்ளிட்டோர் வந்தனர்.
இதனால் ஐதராபாத் அணியின் விக்கெட்டுகளை கேகேஆர் அணி வீழ்த்திய போது ஒவ்வொரு முறையும் சுகானா துள்ளிக்குதித்து கொண்டாடினார். வழக்கமாக ஐதராபாத் அணியின் போட்டிகளில் காவ்யா மாறன் பக்கமே கேமரா திரும்பி இருக்கும். ஆனால் இன்று காவ்யா மாறன் சோகமாக காணப்பட்ட நிலையில், மறுபக்கம் உற்சாகத்தில் குதித்த சுகானா பக்கமே கேமரா நிரந்தரமாக இருந்தது.