சென்னை : ஐதராபாத் அணியின் இளம் வீரர் நிதிஷ் ரெட்டி 10 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
ஐபிஎல் பைனலில் கேகேஆர் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்பின் கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், நாங்கள் முதலில் பவுலிங் செய்யவே விரும்பினோம் என்று தெரிவித்தார். இதனால் இரு அணிகளின் திட்டமும் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது.

அதேபோல் போட்டிக்கு முன் ஐதராபாத் அணியின் இளம் நட்சத்திர வீரர் நிதிஷ் ரெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்திய கிரிக்கெட் அடுத்த ஹர்திக் பாண்டியா என்று ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால் நம்பர் 4 பேட்ஸ்மேனாக விளையாடுவதோடு, நல்ல வேகப்பந்துவீச்சாளராகவும் உருவாகி வருகிறார்.
இந்த சீசனில் மட்டும் 13 போட்டிகளில் விளையாடிய நிதிஷ் ரெட்டி 291 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் பிறந்தநாளன்று ஐபிஎல் பைனிலும் சம்பவம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா 2 ரன்களிலும், ட்ராவிஸ் ஹெட் டக் அவுட்டாகியும், ராகுல் த்ரிப்பாட்டி 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் ஐதராபாத் அணி 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது எய்டன் மார்க்ரம் உடன் நிதிஷ் ரெட்டி பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் தேவைக்கேற்ப பவுண்டரிகளை விளாசி, ஸ்கோரை உயர்த்தினர். வைபவ் அரோரா வீசிய 6வது ஓவரில் மட்டும் 17 ரன்கள் விளாசப்பட்ட, இரு பேட்ஸ்மேன்கள் நன்றாக செட்டிலாகி விட்டதாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் 6வது ஓவரை வீச ஹர்சித் ராணா அழைக்கப்பட்டார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே நிதிஷ் ரெட்டி பவுண்டரி அடிக்க, இன்றைய நாளில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி பந்தை கொஞ்சம் கூடுதல் வேகத்துடன் ஹர்சித் ராணா சரியான லெந்தில் வீச, அதனை எதிர்பார்க்காத நிதிஷ் ரெட்டி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 13 ரன்களில் வெளியேறினார். இதனால் பிறந்தநாளன்று நிதிஷ் ரெட்டி பரிதாபமாக ஆட்டமிழந்து நடந்து சென்றார்.