சென்னை : உலகக்கோப்பை தொடருக்கு பின் ஏற்பட்ட முதுகு வலி குறித்த பிரச்சனைகளை அணி நிர்வாகத்திற்கு கூறிய போது யாரும் கண்டுகொள்ளவில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டார். இதற்கு ஸ்ரேயாஸ் ஐயரின் ஒழுங்கீனமான நடவடிக்கையே காரணம் என்று விமர்சிக்கப்பட்டு வந்தது. அதிலும் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாமல், ஓய்வெடுக்க சென்றது மட்டுமல்லாமல் காயமடைந்ததாக பொய் கூறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் கேகேஆர் அணியை ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு 4வது முறையாக அழைத்து சென்றுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின் எனது முதுகு வலி பிரச்சனைகள் குறித்து அணி நிர்வாகத்திடம் கூறினேன். ஆனால் அது யார் காதிலும் கேட்கவில்லை.
அதேபோல் என்னுடைய போட்டி எப்போதும் நான் மட்டும் தான். ஐபிஎல் தொடர் நெருங்கும் போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் திட்டம் மற்றும் வியூகங்கள் ரீதியாகவும் முன்னேற வேண்டும் என்று நினைத்தேன். அதனை சரியாக செயல்படுத்தினால், நிச்சயம் முன்னணியில் இருப்போம் என்று நினைத்தேன். தற்போது நினைத்த இடத்தில் இருக்கிறோம்.
ஒரே நாளில் ரெட் பாலில் இருந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு மாறிட முடியாது. ஒரு பேட்ஸ்மேனாகவும், பவுலராகவும் அது கடினம் தான். அதனால் தொடக்க போட்டிகளில் கடினமாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்து தொடர்ச்சியாக விளையாடும் போது எளிதாக டி20 கிரிக்கெட்டுக்கு பொறுத்தி கொள்ள முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.
நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளார். இதற்கு முன்பாக டெல்லி அணியின் கேப்டனாக இருந்த போது ஸ்ரேயாஸ் ஐயர் இறுதிப்போட்டியில் விளையாடி இருந்தார். அந்த போட்டியில் தோல்வியடைந்த நிலையில், முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.