சென்னை : ராஜஸ்தான் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டிக்கு முன் ஐதராபாத் அணியின் மீட்டிங் வெறும் 35 வினாடிகளில் முடிந்தது தெரிய வந்துள்ளது.
இந்திய அணியின் கேப்டனாக இருந்த போதும் சரி, சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த போதும் சரி.. தோனி பெரியளவில் டீம் மீட்டிங்கை நடத்த மாட்டார். பவுலர்களின் மீட்டிங்கில் கூட தோனி பெரியளவில் கலந்து கொண்டதில்லை. பயிற்சியாளருடன் சில ஆலோசனைகளை நடத்திய பின், சூழலையும் பிட்சையும் கணித்து உடனடியாக முடிவுகளை எடுப்பார்.

அதன்பின் களத்தில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கு ஏற்ப தோனி தனது திட்டத்தை செயல்படுத்துவார். ஆனால் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவோ, ஆலோசனைகளில் தீவிரமாக இருப்பார். தற்போது சர்வதேச அரங்கில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வரும் பேட் கம்மின்ஸின் ஸ்டைல் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் சைமன் பேசுகையில், கம்மின்ஸ் எப்போதும் பிராக்டிகலான மனிதர். அதேபோல் நிதானமாக இருப்பார். மற்ற வீரர்களின் பிரச்சனைகளையும், எண்ண ஓட்டங்களையும் அவர்களின் கண்ணோட்டத்திலேயே புரிந்து கொள்ளக் கூடியவர். எப்போதும் எதிரணியை பற்றியும், ஆடுகளத்தை பற்றியும் சரியான தரவுகளை அறிந்து கொள்வார்.
அதேபோல் நேரத்தை விரயம் செய்ய மாட்டார். டீம் மீட்டிங்கில் பெரிதாக நேரத்தை செலவு செய்ய மாட்டார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன் 35 வினாடிகள் மட்டுமே டீம் மீட்டிங் நடந்தது. இந்த போட்டியில் கேப்டனாக கம்மின்ஸின் பங்கு அதிகம். ஏனென்றால் இரு வலது கை பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது இடதுகை ஸ்பின்னர் இருப்பது சரியாக இருக்கும் என்று நினைத்தோம்.
ஆனால் அபிஷேக் சர்மாவை பவுலிங் செய்ய வைப்பார் என்று நினைக்கவில்லை. அதுதான் ஆட்டத்தின் போக்கை மொத்தமாக மாற்றிவிட்டது. பயிற்சியாளர் வெட்டோரி மற்றும் கம்மின்ஸ் இடையில் நல்ல புரிதல் உள்ளது. அவர்கள் இருவரும் வீரர்களுக்கு சுதந்திரம் கொடுத்து விளையாட வைப்பதே வெற்றிக்கான ரகசியம் என்று தெரிவித்துள்ளார்.