என்னோட நேரம் சரியில்லையா.. எவ்வளவு மோசமான நிலையில் இருந்திருக்கிறேன் தெரியுமா.. ரிங்கு சிங்!
அகமதாபாத் : பாலிவுட்டில் வெளியான 12 ஃபெய்ல் படத்தை பார்த்து கண்ணீர் சிந்தியதாக கேகேஆர் அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் சேர்க்கப்படவில்லை. கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்திய அணியில் பயணித்து வரும் ரிங்கு சிங், ஃபினிஷர் ரோலில் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியாவின் வருகையால் ரிங்கு சிங் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

அதேபோல் கேகேஆர் அணியிலும் ரிங்கு சிங்கிற்கு போதுமான வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. கடந்த சீசனில் நம்பர் 5ல் களமிறங்கி வந்த ரிங்கு சிங், இந்த சீசனில் நம்பர் 7ல் களமிறக்கப்பட்டு வருகிறார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங் 11 இன்னிங்ஸ்களில் விளையாடிய ரிங்கு சிங், 168 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.
இதனால் பலரும் ரிங்கு சிங்கிற்கு நேரம் சரியில்லை என்றும், கடினமான சூழலில் இருக்கிறார் என்றும் சிலர் கருத்து கூறி வருகின்றனர். இதுகுறித்து ரிங்கு சிங் பேசுகையில், நேரம் சரியில்லை என்று மாற்றுத்திறனாளிகள் சொல்லலாம். ஆனால் உடலில் அனைத்தும் நன்றாக இருக்கும் போதும், நமது நேரம் சரியில்லை என்று சொல்லக் கூடாது. இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல முடியாத போது, பலரும் கண்ணீர் சிந்தினோம்.
ஆனால் உலகக்கோப்பை தோல்வியை மறந்துவிட்டு அடுத்த இலக்கை நோக்கி நகர்வது தான் நம்மால் செய்ய முடிந்த ஒன்று. சீனியர் கிரிக்கெட்டில் இதுவரை நான் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. இன்னும் எந்த கோப்பையையும் வெல்லவில்லை. ஆனால் இப்போது டி20 உலகக்கோப்பை அணியுடன் பயணிக்க போகிறேன். நிச்சயம் எனது கைகளில் கோப்பை இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுதான் எனது கனவாகவும் உள்ளது.
நான் எமோஷனலான மனிதன் கிடையாது. ஆனால் சில நேரங்களில் சில நெகிழ்ச்சியான ஊக்கமளிக்கும் படங்களை பார்க்கும் போது கண்ணீர் வரும். அண்மையில் 12 ஃபெயில் படத்தை பார்த்த பின் கண்ணீர் வடித்தேன். ஏனென்றால் அந்தப் படத்தை பார்க்கும் போது எனது பயணத்தை காண முடிந்தது. அதுபோன்ற கடினமான சூழலில் இருந்து தான் நானும் வளர்ந்து நிற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications