சென்னை : கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் சாம்பியன் பட்டத்தை வென்று டெல்லி அணிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் பைனலில் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கேகேஆர் அணி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலமாக ஐபிஎல் கோப்பையை வென்ற 5வது இந்திய கேப்டன் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். இதுதான் மூலமாக ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி எரா தொடங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது.

முதல்முறையாக 2018ஆம் ஆண்டு டெல்லி அணி கேப்டன் பொறுப்பில் இருந்து கம்பீர் பாதியில் விலகிய போது, அந்த இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் கொண்டு வரப்பட்டார். இதன்பின் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து சென்றார்.
அதேபோல் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி இறுதிப்போட்டி வரை சென்று மும்பை அணியிடம் தோல்வியடைந்தது. தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் பாதியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட, புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டார். இந்த சீசனுக்கு பின் உள்ளூர் வீரரான ரிஷப் பண்ட்-ஐ கேப்டனாக தொடர டெல்லி அணி நிர்வாகம் முடிவு செய்தது.
இதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயரையும் டெல்லி அணி கழற்றிவிட்டு அதிர்ச்சி கொடுத்தது. இதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் கேகேஆர் அணியால் வாங்கப்பட்டார். கேகேஆர் அணி ரசிகர்களே ஸ்ரேயாஸ் ஐயரை கிண்டல் செய்த நிலையில், முதல் சீசன் சரியாக அமையவில்லை. பின்னர் 2வது சீசனில் காயம் காரணமாக விலக, ஸ்ரேயாஸ் ஐயர் வேண்டாம் என்று குரல்கள் எழத் தொடங்கின.
இந்த நிலையில் கேகேஆர் அணிக்கு தலைமையேற்ற 3வது சீசனிலேயே ஸ்ரேயாஸ் ஐயர் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பின் கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதால், ரசிகர்கள் பலரும் ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டி வருகின்றனர். அதேபோல் தன்னை கழற்றிவிட்ட டெல்லி அணி நிர்வாகத்திற்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தரமான பதிலடியை கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் அடுத்த கேப்டனுக்கான ரேசில் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் இருந்து வந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று போட்டியில் நுழைந்துள்ளார். ஏற்கனவே இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்திருப்பதால், ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன்சி ஸ்ரேயாஸ் ஐயரை தேடி வரவும் வாய்ப்புகள் உள்ளது.