சென்னை : கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இரு அணிகளும் குவாலிஃபையர் முதல் போட்டியில் விளையாடிய நிலையில், தற்போது மீண்டும் இறுதிப்போட்டியில் மோதுகிறது. சேப்பாக்கம் மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்பட்ட நிலையில், பிட்ச் சிவப்பு மண்ணை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் பிட்சில் ஸ்பின்னர்களுக்கு பெரியளவில் உதவி இருக்காது என்றும், மாறாக கூடுதல் பவுன்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சென்னையில் நேற்று மழை பெய்ததால், பனிப்பொழிவு இருக்காது என்று மைதான ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஐதராபாத் அணியின் பலம் பேட்டிங் என்பதால், முதலில் பேட்டிங் செய்வதாக கூறியுள்ளார். அதேபோல் கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ட போது, நாங்கள் முதலில் பவுலிங் செய்திருப்போம் என்று கூறினார். இதனால் இரு அணிகளுக்கும் எது தேவையோ அதுவே டாஸில் கிடைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
கம்மின்ஸ் பேசுகையில், சிறந்த பிட்சாக தெரிகிறது. எப்போதும் விக்கெட்டை கணிப்பதில் நான் திறமைசாலி கிடையாது. கடந்த போட்டியின் போது பனிப்பொழிவு வரவில்லை. அதனால் இன்றைய ஆட்டத்திலும் பனிப்பொழிவு இருக்காது என்று நினைக்கிறேன். நாங்கள் எங்களுக்கான ஸ்டைலில் விளையாடுகிறோம். அது ஒவ்வொரு போட்டியிலும் சரியாக இருக்காது. சில போட்டிகளில் சிரமங்கள் வரும். அப்துல் சமத்திற்கு பதிலாக ஷாபாஸ் அஹ்மத் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், நாங்கள் பவுலிங் செய்திருப்போம். இந்த பிட்ச் மிகவும் வித்தியாசமானது. எனது பலத்திற்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்த வேண்டும். எப்போதெல்லாம் அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோமோ, அப்போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இது மிகப்பெரிய போட்டி. ஏராளமான வீரர்கள் முதல்முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறார்கள். நிச்சயம் வெல்வோம் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார்.