லக்னோ : லக்னோ அணியின் துணை பயிற்சியாளராக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் லான்ஸ் க்ளூசினர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
17வது ஐபிஎல் தொடருக்காக லக்னோ அணி மிகச்சிறப்பாக தயாராகி வருகிறது. ஏற்கனவே பயிற்சியாளர் ஆண்டி பிளவர், ஆலோசகர் கவுதம் கம்பீர் ஆகியோருடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஜஸ்டின் லாங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் ஸ்பின் ஆலோசகர் ஸ்ரீராம் இருப்பதால், இந்த கூட்டணி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அதேபோல் கேப்டனாக கேஎல் ராகுல் நியமனம் செய்யப்பட்ட நிலையில், துணை கேப்டனாக பூரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆலோசகராக சுரேஷ் ரெய்னா மற்றும் சேவாக் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. லக்னோ அணி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க அந்த அணி நிர்வாகம் மிகச்சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர் ஷமார் ஜோசப்பை ஒப்பந்தம் செய்தது லக்னோ அணி. இங்கிலாந்து அணியின் மார்க் வுட் வேலைப்பளு காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலக, அவரது இடத்தில் ஷமார் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. ஆர்சிபி அல்லது சிஎஸ்கே அணிக்கு ஷமார் ஜோசப் விளையாடுவார் என்று பார்க்கப்பட்ட நிலையில், லக்னோ அணி தட்டி தூக்கியது ஆச்சரியமளித்தது.
இந்த நிலையில் ஷமார் ஜோசப் உடன் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பணியாற்றிய தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் லான்ஸ் க்ளூசினரை லக்னோ அணி துணை பயிற்சியாளராக ஓப்பந்தம் செய்துள்ளது. இதனால் ஷமார் ஜோசப்பின் உச்சக்கட்ட திறமையை வெளிப்படுத்தும் நோக்கில் லக்னோ அணி நிர்வாகம் செயல்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இவர் ஏற்கனவே மும்பை அணியில் ஷான் பொல்லாக் பவுலிங் பயிற்சியாளராக இருந்த போது, அவருக்கு துணையாக பணியாற்றியவர். அதன்பின் எஸ்ஏ20 லீக் தொடரில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக பணியாற்றினார். இவரது செயல்பாடுகள் திருப்தியளிக்க, ஐபிஎல் தொடருக்கும் லக்னோ அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.