மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு முக்கிய வீரர்களான முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு இடையில் தான் புகைச்சல் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளர் லசித் மலிங்காவுடனும் ஹர்திக் பாண்டியா சுமூகமான உறவில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பங்கேற்ற போது ஹர்திக் பாண்டியா - லசித் மலிங்கா இடையே ஏதோ பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. போட்டி முடிந்த உடன் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கிய போது மலிங்கா, ஹர்திக் பாண்டியாவை தழுவ வந்தார். ஆனால், ஹர்திக் பாண்டியா அவரை பார்க்காதது போல தள்ளி விட்டு, முகத்தை திருப்பிக் கொண்டு சென்றார்.

அந்த வீடியோவை பார்த்தபோது இது சாதாரண நிகழ்வாகக் கூட இருக்கலாம் என பலரும் எண்ணினர். ஆனால், பின்னர் மற்றொரு வீடியோ வெளியானது. அதில் போட்டியின் போது பவுண்டரி எல்லைக்கு அருகே மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரான் பொல்லார்ட் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் லசித் மலிங்கா அருகருகே அமர்ந்து இருக்கின்றனர்.
அப்போது தண்ணீர் அருந்த வந்த ஹர்திக் பாண்டியா மலிங்கா முகத்துக்கு நேராக நின்று கொண்டார். அப்படியே பொல்லார்ட் இடம் அவர் பேசத் துவங்கினார். அப்போது மலிங்கா இறுக்கமான முகத்துடன் இருக்கையில் இருந்து எழுந்து வேகமாக வெளியேறினார். அவர் சென்ற உடன் பாண்டியா அதே இருக்கையில் அமர்ந்து கொண்டார். இப்படி இரண்டு வீடியோக்களில் பாண்டியா, மலிங்காவை மதிக்காமல் நடந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து மலிங்கா விலகக் கூடும் என கூறப்படுகிறது. 2024 ஐபிஎல் தொடரின் நடுவே அது நடக்காது என்றாலும், அடுத்த ஐபிஎல் தொடரின் போது ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக நீடித்தால் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மூத்த வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரையும் பகைத்துக் கொண்டு ஹர்திக் பாண்டியாவால் ஐபிஎல் தொடரில் வெற்றிகளை குவிக்க முடியாது என்பதே உண்மை.