லக்னோ : லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் பதவி விலகிய நிலையில், அந்த பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் 2022ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி. கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, இதுவரை விளையாடிய இரு சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. கடந்த சீசனில் மும்பை அணியிடம் எலிமினேட்டர் சுற்றில் தோல்வியடைந்தது 4வது இடத்தில் நிறைவு செய்தது.

இதனால் இந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் லக்னோ அணி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. ஏற்கனவே லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்த ஆண்டி பிளவரை நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஜஸ்டிங் லாங்கரை ஒப்பந்தம் செய்தது. ஐபிஎல் தொடரில் முதல்முறையாக பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் பணியாற்றவுள்ளார்.
அதேபோல் லக்னோ அணியின் ஆலோசகராக பணியாற்றி வந்த கவுதம் கம்பீர் திடீரென கேகேஆர் அணியின் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் லக்னோ அணியின் அடுத்த ஆலோசகர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் லக்னோ அணி ஏகானா மைதானத்தில் ஏற்கனவே பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது.
உள்ளூர் வீரர்களை ஒருங்கிணைத்து லக்னோ அணி நிர்வாகிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்க 2 இந்திய முன்னாள் இந்திய வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் சிஎஸ்கே ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா மற்றும் விரேந்தர் சேவாக் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
இதில் லக்னோ அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவை ஆலோசகராக கொண்டு வர முனைப்புடன் உள்ளது. ஏனென்றால் சொந்த ஊர்க்காரர் என்பதால் ரசிகர்களுக்கு அவருடன் மிகப்பெரிய பிணைப்பு உள்ளது. இதனால் லக்னோ அணியின் ரசிகர்கள் மற்றும் வியாபார எண்ணிக்கையும் உயரும் என்று கணிக்கிறது. அதேபோல் சிஎஸ்கே அணியின் நிர்வாகிகள் ரெய்னாவை கண்டுகொள்ளவில்லை என்பதால், ரெய்னாவும் ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுவார் என்று பார்க்கப்படுகிறது.