லக்னோ : சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற 177 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதோடு, கொஞ்சம் ஸ்லோயராக இருக்கும் என்பதால், சேஸிங் செய்வதே சிறந்த முடிவாகும். இதன்பின் சிஎஸ்கே அணிக்காக ரஹானே - ரச்சின் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இதில் ரச்சின் ரவீந்திரா சந்தித்த முதல் பந்திலேயே போல்டாகி டக் அவுட்டாக, பின்னர் வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 13 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிஎஸ்கே அணி பவர் பிளே ஓவர்கள் முடிவதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்ததால், உடனடியாக பேட்டிங் வரிசையை மாற்றி ஜடேஜா களமிறக்கப்பட்டார். இதன்பின் ரஹானே - ஜடேஜா இருவரும் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர்.
இதனால் 6 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 51 ரன்கள் சேர்த்தது. இதன்பின் கேஎல் ராகுல் உடனடியாக ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வந்தார். இதன்பின் இருவரும் சில பவுண்டரிகளை விளாசிய நிலையில், க்ருனால் பாண்டியாவை அட்டாக் செய்ய நினைத்து ரஹானே 36 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த சிவம் துபே 3 ரன்களிலும், இம்பேக்ட் பிளேயராக வந்த சமீர் ரிஸ்வி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் சிஎஸ்கே அணி 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ஜடேஜா - மொயின் அலி கூட்டணி இணைந்து அடுத்த சில ஓவர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 16 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 113 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில், மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்களே சோகமடைந்தனர். இந்த நிலையில் மோசின் கான் வீசிய 17வது ஓவரில் ஜடேஜா அதிரடியாக ஒரு சிக்ஸ் அடித்து அரைசதத்தை எட்டினார்.
பின்னர் ரவி பிஷ்னாய் வீசிய 18வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து மொயின் அலி அசத்தினார். மீண்டும் 4வது சிக்ஸ் அடிக்க முயன்று மொயின் அலி 30 ரன்களில் ஆட்டமிழக்க, தோனி களமிறங்கினார். இதனால் லக்னோ மைதானமே அதிர்ந்து போனது. பின்னர் 19வது ஓவரை வீச மீண்டும் மோசின் கான் அழைக்கப்பட்டார். ஸ்ட்ரைக்கில் தோனி வர, அவர் வீசிய 2 பந்துகள் ஒய்டாக வீசப்பட்டது.
தொடர்ந்து மீண்டும் மோசின் கான் வீசிய முதல் பந்தில் பவுண்டரி அடிக்க, 2வது பந்தை ஸ்கூப் ஷாட் மூலமாக சிக்சராக்கினார். இதனால் அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து கடைசி ஓவரை வீச யாஷ் தாக்கூர் வந்தார். இந்த ஓவரில் ஜடேஜா முதல் 2 பந்துகளில் 3 ரன்கள் சேர்க்க, 3வது பந்தை எதிர்கொண்ட தோனி மிட் விக்கெட்டில் அபார சிக்சரை விளாசினார். பின்னர் 4வது பந்தில் பவுண்டரி அடிக்க, 5வது பந்தில் 2 ரன்கள் சேர்க்கப்பட்டது.
கடைசி பந்தில் தோனி மீண்டும் பவுண்டரி அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ஜடேஜா 40 பந்துகளில் 57 ரன்களும், கடைசி நேரத்தில் வந்த தோனி 9 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 28 ரன்களையும் விளாசினர். 150 ரன்களே எடுக்க முடியுமா என்ற சிஎஸ்கே அணி ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில், தோனியின் அதிரடி காரணமாக சவாலாக இலக்கை லக்னோ அணிக்கு சிஎஸ்கே நிர்ணயம் செய்துள்ளது.